பெண்கள் மீது சோதனை; மன்னிப்பு கேட்டது கட்டார்

விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டறிய அவுஸ்திரேலியா செல்லவிருந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாயப் பரிசோதனை நடத்திய விவகாரத்தில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.

பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை நடத்திய விவகாரத்துக்கு அவுஸ்திரேலிய அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்ததன் பின்னணியில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.

இதன்போது பெண்களின் ஆடையை கழற்றி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இப்பெண்கள் ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களது உள்ளாடையை நீக்கிய பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், அவுஸ்திரேலிய அரசிடம் மருத்துவ ரீதியான உதவிகளைப் பெற்றதாக அதனை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரவித்தார்.

ஒக்டோபர் 2ஆம் திகதி கட்டார் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து யாருக்கேனும் குழந்தை பிரசவித்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை கண்டறிய முனைந்துள்ளனர்.

இதுபோன்றதொரு பரிசோதனை பாலியல் வன்கொடுமைக்கு இணையானது என்று மனித உரிமை காப்பாளர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குழந்தையைப் பெற்றெடுத்த தாயைக் கண்டறிந்து உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக கட்டார் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க பெண் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உடனடியாக எவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை