டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹைதராபாத் அணி அபார வெற்றி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 47ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 88 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். இதன்போது டேவிட் வோர்னர், 66 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மணிஷ் பான்டே களத்தில் நங்கூரமிட்டார்.

இதனையடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த விருத்திமான் சஹா, 87 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். மணிஷ் பான்டே 44 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

டெல்லி அணியின் பந்துவீச்சில், நோட்ஜே மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 220 என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே, தனது முதல் பந்தை எதிர்கொண்ட ஷிகர் தவான் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொயினிஸ் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இதன்பிறகு களமிறங்கிய சிம்ரொன் ஹெட்மியர் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த அஜிங்கியா ரஹானே 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் ஆறுதல் அளிக்கும் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் பட்டேல் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய கார்கிஸோ ரபாடா 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ரிஷப்பந்த் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடிக்குள்ளான டெல்லி அணி, 19 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஹைதராபாத் அணி 88 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அஸ்வின் 7 ஓட்டங்களுடனும், ஹென்ரிச் நோட்ஜே 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க தேஸ்பான்டே 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தார்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நதீம், ஹோல்டர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகள் அடங்களாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விருத்திமான் சஹா தெரிவுசெய்யப்பட்டார்.

இதுவரை நடப்பு தொடரில் 47 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள போதும், இதுவரை ஒரு அணிக்கூட பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

ஆரம்பத்தில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி அதிர்ச்சி காட்டிய டெல்லி அணி, கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை பதிவுசெய்யதுள்ளது.

இதேவேளை நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், ஒரு அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை