தாக்குதல்தாரி சில நாட்களுக்கு முன்னர் துனீசியாவிலிருந்து ஐரோப்பா வந்தவர்

பிரான்ஸ் தேவாலயம் ஒன்றில் மூவரைக் கொன்ற துனீசிய நாட்டு ஆடவர் அண்மையிலேயே ஐரோப்பாவுக்கு வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21 வயதான அந்த சந்தேக நபர் கடந்த மாதம் குடியேறிகள் படகு மூலம் இத்தாலி தீவான லம்படுசாவை வந்தடைந்திருப்பது செஞ்சிலுவை சங்க ஆவணத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலை “இஸ்லாமியவாத பயங்கரவாதத் தாக்குதல்” என்று பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற பொது இடங்களில் மக்களை பாதுகாப்பதற்கான படையினரின் எண்ணிக்கை 3000இல் இருந்து 7000 ஆக அதிகரிக்கப்படும் என்று மெக்ரோன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதோடு நாட்டின் தேசிய பாதுகாப்பு உசார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தாக்குதல்தாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இதில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக பிரான்ஸ் தீவிரவாத எதிர்ப்பு தலைமை அரச வழக்குத்தொடருநர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் பாரிஸில் ஆசியர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிலையிலேயே பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்தக் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சாமுவேல் பெட்டி என்ற அந்த ஆசிரியர் இறைத்தூதர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் ஒன்றை தனது மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

கொலையை அடுத்து இறைத்தூதர் தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் தொடர்பில் அந்த நாட்டின் நிலைப்பாடு துருக்கி உட்பட முஸ்லிம் நாடுகளில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

நீஸ் நகரத்தில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முன், “அல்லாஹு அக்பர்” (இறைவன் பெரியவன்) என்று தொடர்ச்சியாக கூச்சலிட்டதை கேட்க முடித்துள்ளது.

தாக்குதல்தாரியிடம் இருந்து ஒரு குர்ஆன், இரண்டு கைபேசிகள் மற்றும் 30 செ.மீ. கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக தீவிரவாத எதிர்ப்பு தலைமை வழக்குத்தொடருநர் ஜீன் பிரான்கொயிஸ் ரிகார்ட் தெரிவித்தார்.

“தாக்குதல்தாரி விட்டுச் சென்ற பை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில் இரு கத்திகள் இருந்தன. அவை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டவை அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல்தாரியின் பெயர் பிராஹிம் அவுசவுஸ் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீஸுக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன், "எங்களுடைய விழுமியங்களுக்காகத் தான் நாங்கள் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறோம். எந்த பயங்கரவாதத்திற்கும் அடிபணியாத, சுதந்திரமாக நம்பிக்கையை தேர்வு செய்துகொள்ள இங்குள்ள உரிமைதான் அந்த விழுமியம்" என தெரிவித்தார்.

மேலும் "நான் இன்று மீண்டும் ஒருமுறை மிகுந்த தெளிவுடன் சொல்கிறேன்; நாங்கள் எதனையும் விட்டு கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார் மெக்ரோன்.

கடந்த வியாழனன்று பிரான்ஸில் மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. அவிக்னான் நகரில் பொலிஸாரை கைத்துப்பாக்கி கொண்டு அச்சுறுத்திய நபரை பொலிஸார் சுட்டு வீழ்த்தினர்.

சவூதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெளியே உள்ள காவலாளி ஒருவர் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நீஸ் நகரில் பிரான்ஸில் அதுவரை இல்லாத அளவு மோசமான ஒரு ஜிஹாதிய தாக்குதல் நடைபெற்றது. துனீஷியாவைச் சேர்ந்த ஒருவர் வேன் ஒன்றை கூட்டத்திற்குள் ஓட்டிச் சென்றதில் 86 பேர் கொல்லப்பட்டனர்.

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை