வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் கொரோனா தொற்று பற்றி குறைமதிப்பீடு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார்.

தொடர்ந்து நோய்த் தொற்று இருக்கும் நிலையில் அவர் வெள்ளை மாளிகை மாடி முகப்பில் தோன்றி புகைப்படத்திற்காக தமது முகக்கவசத்தையும் அகற்றினார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அளவுக்கு டிரம்ப் உடல்நிலை தேறிவிட்டதாகவும், கடந்த 72 மணிநேரமாக அவருக்கு மூச்சித்திணறல், காய்ச்சல் எதுவும் இல்லை எனவும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனினும் டிரம்ப் மீது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவரது மருத்துவர், அவர் இன்னும் முழுமையாக ஆபத்து நிலையில் இருந்து விலகவில்லை என்று தெரிவித்தார்.

அண்மைய தினங்களில் டிரம்பின் பணிக் குழுவைச் சேர்ந்த பலருக்கும் கொவிட்–19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

டிரம்பின் உடல் நிலை குறித்து கடந்த வார இறுதியில் முரண்பாடான தகவல் வெளியான சூழலில் அவரது நோய்த் தீவிரத்தன்மை குறித்து இன்னும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், டிரம்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பணிபுரியும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் இதுவரை பதிலில்லை. உலகில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 7.4 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 210,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி தனது இரண்டாவது தவணைக்காக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடும் நிலையிலேயே டிரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வொசிங்டன் டி.சி புறநகர் பகுதியில் இருக்கும் இராணுவ மருத்துவமனையில் இருந்து கடந்த திங்கட்கிழமை மாலை வெளியேறிய டிரம்ப் ஹெலிகொப்டரில் சிறிது தூரம் பயணித்து வெள்ளை மாளிகையை வந்தடைந்தார்.

அங்கு அவர் தனது முகக்கவசத்தை அகற்றி இராணுவ பாணியில் வணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரசார பாணியில் தாம் திரும்பி வரும் வீடியோ ஒன்றை அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

வீடியோ செய்தி ஒன்றையும் வெளியிட்ட அவர், அமெரிக்க மக்கள் பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்தார்.

“கொவிட்–19 வைரஸ் தொற்றுக்கு அஞ்சாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை ஆட்கொள்ளவிடாதீர்கள். எங்களது நிர்வாகத்தில் நல்ல மருந்துகளைத் தயாரித்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை