லங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட் போன்ற முன்னணி வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாக வுள்ளது. இந்தத் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் அஞ்சலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொலம்போ கிங்ஸ் அணிக்காக அன்ட்ரூ ரசல், பாப் டூ பிளசிஸ், மன்விந்தர் பிஸ்வால், இசுரு உதான, தினேஷ் சந்திமால் ஆகிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தம்புள்ளை அணிக்காக தசுன் சானக்க தலைமை வகிப்பதோடு டேவிட் மிலர், சமித் படேல், காலோஸ் பிரத்வெயிட், டோட் ஆஸ்டல் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உட்படுகின்றனர்.

லசித் மாலிங்க தலைமையிலான கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு சஹீட் அப்ரிடி, சர்ப்ராஸ் அஹமட், கொலின் இன்கிராம் மற்றும் மொஹமட் அமீர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோன்று ஜப்னா ஸ்டலியன்ஸ் அணிக்காக ஆசிப் அலி மற்றும் உஸ்மான் சின்வாரி தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு கண்டி டஸ்கஸ் அணிக்காக கிறிஸ் கெயில், லியாம் பிளன்கட், வஹாப் ரியாஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எனினும் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவை எந்த அணியும் வாங்குவதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீரர்கள் தேர்வில் மொத்தம் 438 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதில் 165 இலங்கை வீரர்கள் மற்றும் 273 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

எனினும் இந்த வீடியோ முறையிலான வீரர்கள் தேர்வில் அடிக்கடி குழப்பங்கள் இடம்பெற்றன. இதில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டொட் அஸ்ட்லேவை தம்புள்ளை அணி பெற்ற நிலையில் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே தொடரில் இருந்து விலகி இருப்பது பின்னர் தான் தெரியவந்தது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் வரும் நவம்பர் 21 தொடக்கம் டிசம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் ஆரம்பத்தில் சூரியவெவ அரங்கிலும் பிந்திய போட்டிகள் பல்லேகலவிலும் நடைபெறவுள்ளன. வெளிநாட்டில் இருந்து தொடருக்காக வருபவர்களுக்கு ஓர் இலகுவான தனிமைப்படுத்த நடவடிக்கைக்கு இலங்கை அரசு அனுமதிக்காத நிலையில் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 14 நாள் கண்டிப்பான தனிமைப்படுத்தலுக்கு அனைவரும் இணங்கி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை