இந்திய விசாவை பெறுவதற்கு ஐ.சி.சியிடம் பாகிஸ்தான் கெடு

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா கிடைப்பதை வரும் ஜனவரிக்குள் ஐ.சி.சி உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், இந்தியாவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அளிப்பதில் சர்ச்சைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஒக்டோபரில் டி20 உலகக் கிண்ணப் போட்டியை இந்தியா நடத்துகிறது.

அதில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அவர்களுக்கான விசா வழங்குவது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி வசிம் கான் கூறியதாவது:

சர்வதேச போட்டிகள் ஐ.சி.சியுடன் தொடர்புடையவை. எனவே, டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு எங்களுக்கான விசா கிடைப்பது தொடர்பாக ஐ.சி.சியிடம் பேசியுள்ளோம். போட்டியில் பங்கேற்க வரும் நாடுகளின் வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு போட்டியை நடத்தும் நாடு விசா மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.

அந்த வகையில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளிட்டோருக்கும் இந்திய விசா வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் சபையிடம் ஆலோசித்து எங்கள் வீரர்களுக்கு விசா கிடைப்பது தொடர்பாக உறுதியளிக்குமாறு ஐ.சி.சியிடம் தெரிவித்துள்ளோம்.

அதையும் வரும் ஜனவரிக்குள்ளாக உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை எங்களுக்கான விசா கிடைக்காவிட்டால், அதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை மூலம் இந்திய அரசுடன் ஐ.சி.சி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

உண்மையைப் பேசுவதானால், இந்தியா–பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதற்கு தற்போதைய நிலையிலோ, சமீபத்திய எதிர்காலத்திலோ வாய்ப்புகள் இல்லை என்று வாசிம் கான் கூறினார்.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை