எம்.பிக்களின் பாதுகாப்பிற்கே பொலிஸார்; அவர்களது கோவைகளை தூக்கி செல்வதற்கல்ல

மக்கள் மீது நம்பிக்ைகயில்லாதோரே மேலதிக பாதுகாப்பு கோருகின்றனர்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கன்றி பொதுமக்களுக்காக அதிகளவு பொலிசாரை சேவையில் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமென அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதென குறிப்பிட்ட அவர் பொது மக்கள் தொடர்பில் நம்பிக்கை இல்லாதவர்களே பொலிஸ் பாதுகாப்பு கோருகின்றனர் என்றும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன கேள்வி ஒன்றை எழுப்பி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு 04 பேரிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டிருக்கின்றது. பாதாள உலக கோஷ்டி மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களின் அச்சுறுத்தல் பாரியளவில் காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் போதைப்பொருளுக்கு எதிராக குரல்கொடுக்கும் உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பொலிஸாரின் எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டிருப்பது எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அதனால் இதுதொடர்பில் அரசாங்கம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ,தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் 85,000 பொலிஸ் அதிகாரிகளே இருக்கின்றனர். அவர்களில் 38,000 பேர் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது மக்கள் தொடர்பில் நம்பிக்கை இருக்கவேண்டும். அவ்வாறு நம்பிக்கை இல்லாதவர்களே பொலிஸ் பாதுகாப்பு கோருகின்றனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் உறுப்பினர்களின் கோப்புகளை தூக்கிச்செல்லவா பொலிஸ் பாதுகாப்பு கோருகின்றனர் எனக் கேட்கத் தோன்றுகிறது.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம் 

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை