இலங்கையின் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டியில் கெல்வின் சம்பியன்

ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டித் தொடர்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபல்யமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கையும் இவ்வகையான இணையவழி ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் தனித்துவமிக்க இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கி தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் ஸ்பீட் ரன்ஸ் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டித்தொடர் இலங்கையின் வரலாற்றில் நடைபெற்ற முதல் இணையவழி போட்டித் தொடராக தடம் பதித்துள்ளது.

இந்த போட்டித் தொடருக்கு ”HNB Solo” Mobile செயலி அனுசரணை வழங்கியதுடன், தொடரின் மேலதிக ஒழுங்கமைப்பாளராக மென்டரின் ரீட் நிறுவனமும் சிலோன் மோட்டர் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனமும் செயற்பட்டிருந்தன.

இதில் மென்டரின் ரீட் நிறுவனம் இலங்கையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளுக்கான களத்தினை உருவாக்கி கொடுக்கும் ஒரு தளமாக இருக்கின்றது. அந்தவகையில், மென்டரின் ரீட் நிறுவனம் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டித் தொடர்களை கொழும்பில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் ஒழுங்கு செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்துவருகின்றது.

இதேநேரம், ஸ்பீட் ரன்ஸ் ஈ-ஸ்போர்ட்ஸ் தொடரின் முதல் கட்ட சுற்றுப்போட்டிகள் மாத்தறையில் வெற்றிகரமாக நடைபெற்றன. தொடர்ந்து, இந்த தொடரின் இரண்டாம் கட்ட சுற்றுப்போட்டிகள் மார்ச் 8ஆம் திகதி கொழும்பு One Galle Face பல்வணிக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளில் ஹூசைபா ஜெபர்ஜி வெற்றியாளராகவும் சமோத் சமரக்கோன் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார். தொடரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு PS4 உபகரணத்துடன் விளையாட்டு மேடையில் Grand Tourismo Game இணை விளையாடவென பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு இருக்கைகள் வழங்கப்பட்டிருந்தது. ஓவ்வொரு விளையாட்டு இருக்கைகளும் குறித்த Game விளையாட தேவையான அத்தியாவசிய கருவிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்தியேக தொலைக்காட்சி ஒன்றுடன் Game இற்கு தேவையான மேலதிக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் ஒரு மெய்நிகர் அனுபவத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, ‘The Ultimate Driving Stimulation Challenge’ எனும் தலைப்புடன் செப்டெம்பர் 5ஆம் திகதி ஸ்பீட் ரன்ஸ் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் சுற்றுப் போட்டிகள் என்பன கோலாகலமாக நடைபெற்றன.

இறுதிப் போட்டியிலும், மூன்றாம் சுற்றுக்கான போட்டிகளிலும் எதிர்பாராத திருப்பங்களுடன் மோதல்கள் இடம்பெற்றிருந்ததுடன் விரேன் பொத்தேஜூ மூன்றாம் சுற்றின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். அதேநேரம், மூன்றாம் சுற்றில் இரண்டாம் இடத்தை ரியாஸ் ஹப்ராத்தும் மூன்றாம் இடத்தை ஆதம் ஜூனைத்தும் சுவீகரித்துக் கொண்டனர்.

இதனை அடுத்து இறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், கெல்வின் கிங்ஸ்லி சம்பியன் பட்டத்தை பெற்றார். தொடர்ந்து, விரேன் பொத்தேஜூ இரண்டாம் இடத்தையும் ரியாஸ் ஹப்ராத் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். தொடரில் சம்பியன் பட்டம் வென்ற வீரருக்கு சர்வதேச போட்டித் தொடரான World Motor Sports Games of FIA இல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. குறித்த வாய்ப்பு உலகெங்கிலும் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் போட்டித் தொடர் ஒன்றின் வாய்ப்பாகும்.

இந்த ஸ்பீட் ரன்ஸ் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டித்தொடரின் மூலம் இலங்கையினை சர்வதேச ரீதியில் மிளிரச்செய்யும் முதல் வாய்ப்பை மென்டரின் ரீட் நிறுவனம் மிகுந்த சிரத்தையுடனும் உத்வேகத்துடனும் ஆரம்பித்து வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதோடு இலங்கைத் தீவில் ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஓர் கௌரவமிக்க விளையாட்டாக மாற்றியமைப்பதிலும் மென்டரின் ரீட் நிறுவனம் தீவிரமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை