உலகெங்கும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் 900,000 ஆக அதிகரிப்பு

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 900,000ஐ தாண்டி இருப்பதோடு நோய்த் தொற்றுச் சம்பவங்கள் 27.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதோடு அங்கு உயிரிழப்பு 190,000ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவில் 6.3 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 127,000க்கும் அதிகமானோரும் தொடர்ந்து இந்தியாவில் சுமார் 74,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நாளாந்த நோய்த் தொற்றின் புதிய உச்சமாக நேற்று இந்தியாவில் 95,735 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் அங்கு நோய்த் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 4.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 4.1 மில்லியன் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருக்கும் பிரேசிலை இந்தியா முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் இரண்டாவது பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மையப்புள்ளியாக மாறியுள்ளது.

எனினும் அமெரிக்காஸ் பிராந்தியத்தில் உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மெக்சிகோ, பெரு, கொலம்பியா, சிலி மற்றும் ஈக்வடோர் ஆகிய நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

கொவிட்–19 தொற்றுக் காரணமாக உலகெங்கும் சராசரியாக 5,600க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக ரோய்ட்டர்ஸ் தரவு குறிப்பிடுகிறது. உயிரிழப்பு வேகம் நிலையாக இருப்பதோடு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 700,000இல் இருந்து 80,000ஐ தொட 17 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில் 800,000இல் இருந்து 900,000ஐ எட்ட 18 நாட்கள் ஆகியுள்ளன.

எனினும் நோய்த் தொற்றினால் பிரேசில் மற்றும் அமெரிக்காவில் மரண வீதம் 3 ஆக இருக்கும் நிலையில் இந்தியாவில் அது ஒரு வீதமாகவே உள்ளது.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை