அரபு லீக்கில் பலஸ்தீனத்தின் கண்டனத் தீர்மானம் தோல்வி

இஸ்ரேல்–ஐ.அ. இராச்சிய உறவு:

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய உடன்படிக்கையை கண்டிப்பதை அரபு லீக் கைவிட்டுள்ளது.

அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் வீடியோ கொன்பிரன்ஸ் முறையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. இதில் பலஸ்தீனம் முன்வைத்த தீர்மானத்தையே அரபு லீக் நாடுகள் தோற்கடித்துள்ளன.

2002 இன் இரு நாட்டு தீர்வைக் கொண்ட அமைதி முயற்சி அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன விவகாரத்தில் இறுதித் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் இந்தக் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டதாக பலஸ்தீன இராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுக்கு சட்டபூர்வமான தன்மையை கொடுப்பதற்கு முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நாடுகளின் பெயர்களை அவர் வெளியிடவில்லை. 1967 இல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பலஸ்தீன தனி நாடு ஒன்றை உருவாக்கும் உடன்படிக்கை ஒன்று எட்டப்படாத நிலையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதை பெரும்பாலான அரபு நாடுகள் நிராகரித்து வருகின்றன.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை