இராணுவ கலகம்: மாலி ஜனாதிபதி இராஜினாமா

மாலி ஜனாதிபதி இப்ராஹிம் பெளபக்கர் கெஸ்டா படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து தமது பதவியை இராஜினாமா செய்திருப்பதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.  

அரசு மற்றும் பாராளுமன்றத்தையும் கலைப்பதாக தொலைக்காட்சியில் உரையாற்றிய கெஸ்டா தெரிவித்தார். “அதிகாரத்தில் நீடிப்பதன் மூலம் இரத்தம் சிந்துவதை விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். 

தலைநகர் பமகோவுக்கு அருகில் உள்ள இராணுவா முகாம் ஒன்றுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பெளபு சிசோ அழைத்துச் செல்லப்பட்டு சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிராந்திய சக்திகள் மற்றும் பிரான்ஸில் இருந்து கண்டனங்கள் வெளியாகியுள்ளன.  

“ஆயுதப் படைகளில் குறிப்பிட்ட குழு ஒன்று தமது தலையீட்டின் மூலம் இதனை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினால், எனக்கு வேறு தேர்வு இருக்கிறதா?” என்று கெஸ்டா கேள்வி எழுப்பினார்.  

முன்னதாக கலகத்தில் ஈடுபட்ட படையினர் ஜனாதிபதிக்கு ஆதரவான இராணுவ பிரிவை கைப்பற்றினர். ஜிஹாதிக்களுடன் தொடர்ந்து போராடி வரும் இராணுவத்தினரின் ஒரு பகுதியினருக்கு சம்பளம் தொடர்பில் பிரச்சினை இருப்பதோடு ஜனாதிபதி மீது பரவலாக அதிருப்தி இருந்து வருகிறது.  

2018இல் தேர்தலில் தமது இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்ற கெஸ்டா தொடர்பில் ஊழல், பொருளாதாரத்தின் தவறான முகாமை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான வன்முறைகள் தொடர்பில் அதிருப்தி இருந்து வருகிறது.  

இதனையொட்டி மாலியில் அண்மைய வாரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் சீர்திருத்தங்களை கொண்டுவர பழைமைவாத இமாம் முஹமது டிக்கோ தலைமையிலான புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஒன்று அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 08/20/2020 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை