அமெரிக்க அணுஆயுத கப்பல்களை தாக்கியழிக்க தயாராகும் சீனா!

தென்சீன கடல் எல்லையில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா நிறுத்தி உள்ள அணு ஆயுத போர்க் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. சீன அரசுக்கு நெருக்கமான 'குளோபல் டைம்ஸ்' இதழில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தென் சீன கடல் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்தே இந்த மோதல் நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இது முழுமையான மோதலாக வெடிக்க வாய்ப்புள்ளது. தென் சீன கடல் எல்லை பகுதியில் 90% எங்களுக்குதான் சொந்தம் என்று சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இந்த நிலையில் சீனாவின் தென் சீன கடல் எல்லை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது.

 அமெரிக்கா இங்கே இந்த வருட தொடக்கத்திலேயே போர் கப்பல்களை அனுப்பியது. தென் சீன கடல் பகுதிக்கு அமெரிக்கா மொத்தம் மூன்று போர்க் கப்பல்களை அனுப்பியது. அதன்பின் சீனாவும் அங்கு போர் கப்பல்களை நிறுத்தியது. அமெரிக்கா தனது USS Bunker Hill மற்றும் USS Barry எனப்படும் போர் கப்பல்களை சீன எல்லைக்கு அனுப்பி வைத்தது. அங்கு இதனால் பதற்றம் ஏற்பட்டது.

 இதை தொடர்ந்து சீனாவை அடக்கும் வகையில் தற்போது அங்கு மேலும் இரண்டு போர்க் கப்பல்களை அமெரிக்கா களமிறக்கி உள்ளது. அதன்படி யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் (USS Nimitz and USS Ronald Reagan) ஆகிய போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டவை ஆகும்.

 இந்த போர்க் கப்பல்களை அமெரிக்கா சீனா நோக்கி திருப்பியது போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சீனாவை அமெரிக்காவின் இந்த செயல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அந்த பகுதியை நோக்கி DF-21D மற்றும் DF-26 என்ற இரண்டு ஏவுகணைகளை திருப்பி உள்ளது. இந்த இரண்டையும் வேகம் வேகமாக கடல் எல்லைக்கு சீனா கொண்டு வந்துள்ளது.

இந்த இரண்டு ஏவுகணைகளும் சீனாவால் உருவாக்கப்பட்டவை ஆகும். இது போர்க் கப்பல்களை தாக்கி அழிப்பதற்கு என்றே உருவாக்கப்பட்டது ஆகும். அணு ஆயுத போர் கப்பலாக இருந்தாலும் கூட இதன் மூலம் தாக்கி அழிக்க முடியும். இதைத்தான் எல்லையில் சீனா களமிறக்கி உள்ளது. இதனால் அமெரிக்காவும் தற்போது கடும் சீற்றத்தில் உள்ளது.

இந்த நிலையில் தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

இதற்கு தற்போது அமெரிக்காவின் கடற்படை பதிலடி கொடுத்துள்ளது. அதில், "நாங்கள் உங்கள் கடல் பகுதியில் இல்லை. தென் சீன கடல் எல்லையில் நாங்கள் இல்லை. தென் சீன கடல் பகுதியில் இருக்கும் சர்வதேச கடல் எல்லையில் மட்டும்தான் இருக்கிறோம். உங்களை பார்த்தும், உங்களின் ஏவுகணைகளை பார்த்தும் எங்களுக்கு அச்சம் இல்லை" என்று கூறியுள்ளது.

Tue, 07/07/2020 - 06:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை