நாடு இராணுவ ஆட்சியை நோக்கிய செயற்பாடு என்பது பொய்த் தகவல்

தேர்தல் கால விஷமப் பிரசாரம் என்கிறார் திஸ்ஸ 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கக் கூடாது. அந்தச் சட்டத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டுமென லங்கா சமாஜவாத கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண ஆளுநருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், யாழ் ஊடக அமையத்தில் (05) ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென தெற்கில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது,  

இலங்கையில் அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை நீக்க முடியாது. இச்சட்டம் மாற்றப்படவும் கூடாது. ஏனெனில் அரசியலமைப்பில் தற்போதுள்ள இச்சட்ட மூலம் பாதுகாத்து பலப்படுத்தப்பட வேண்டும். அதுவே நல்லது என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது. 

இந்தச் சட்டமூலம் போன்று பலவற்றையும் நீக்க வேண்டும், மாற்ற வேண்டுமென பலரும் பலவற்றையும் கூறுவார்கள். ஆனால் அவை குறித்து அரசாங்கம் எதனையும் அறிவிக்கவில்லை. ஆகவே 13 ஆவது திருத்தம் மாற்றப்படவே நீக்கப்படவோ கூடாதென்பதே எனது நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தச் சட்ட மூலம் தொடர்பில் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டுமென்றார்.  

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாகவும் எதிர்காலத்தில் இராணுவ ஆட்சி ஏற்படலாமென பல அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது அக் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுத்துள்ளார். அரசியலுக்காக திட்டமிட்ட வகையில் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை சிலர் முன்னெடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அத்தோடு நாட்டில் ஜனாதிபதியாக இருக்கின்றவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

அதே போன்று பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக ஜனநாயக ரீதியான தேர்தலொன்று நடக்க இருக்கின்றது. 

ஆகவே ஜனநாயக ரீதியான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசியலுக்காக அதுவும் தேர்தல் காலம் என்பதால் பலரும் பல்வேறு பொய்களைப் பரப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tue, 07/07/2020 - 05:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை