சீனாவின் செவ்வாய்க்கான முதல் விண்கலத்தின் பயணம் ஆரம்பம்

செவ்வாய் கிரகத்திற்கான முதலாவது விண்கலத்தை சீனா நேற்று விண்ணில் ஏவியுள்ளது.

ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த ஆய்வு இயந்திரம் ஹய்னான் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லொங் மார்ச் 5 ரொக்கெட் மூலம் ஏவப்பட்டது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்த விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்து மூன்று, நான்கு மாதங்களில் டியன்வன்–1 ஆய்வு இயந்திரம் செவ்வாயில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டியன்வன்–1 ஆய்வு இயந்திரமானது ஒரு வாரத்திற்குள் செவ்வாய்க்கு அனுப்பப்படும் இரண்டாவது விண்கலமாகும். கடந்த திங்கட்கிழமை ஐக்கிய அரபு இராச்சியமும் தனது விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமும் அடுத்த தலைமுறை விண்கலத்தை இன்னும் ஒருவாரத்தில் செவ்வாயை நோக்கி அனுப்பவுள்ளது.

செவ்வாய் நிலநடுக்கோட்டின் வடக்கே உடோபி படுகையின் தட்டையான பரப்பு ஒன்றிலேயே சீன அய்வு இயந்திரம் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. அந்தப் பிராந்தியத்தின் நில அமைப்பு மற்றும் நிலத்திற்கு அடியில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

சீனா ஏற்கனவே 2011ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை