பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்த நபர்: ஜனாதிபதி தலையீடு

உக்ரைனின் லுட்ஸ்க் நகரில் பஸ் வண்டியில் 10 பேரை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து தனது முற்றுகையை கைவிட்டுள்ளார்.

இதனை அடுத்து பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார். அவர் தரையில் தலைகுப்புற வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் துப்பாக்கிதாரி கைது செய்யப்படும் முன், அவரது கோரிக்கைக்கு ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உடன்பட்டு குறுகிய நேர வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “2005 ஆம் ஆண்டு வெளியான ஏர்த்லிங்ஸ் என்ற ஆவணப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்வையிட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பணயக் கைதிகள் அனைவரும் காயம் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். 44 வயதான மக்சிம் கிரிவோஷ் என்ற துப்பாக்கிதாரி முன்னரும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை பஸ் வண்டி ஒன்றை முற்றுகையிட்ட கிரிவோஷ், சமூக அமைப்புக்கு எதிர்ப்பை வெளியிடுபவர் என்று கூறப்படுகிறது. அவர் பரிந்துரைத்த ஆவணப்படம் விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவது தொடர்பானதாகும். இந்த ஆவணப் படம் சிறந்தது என்றபோதும் அதற்காக ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தக் கூடாது என்று உக்ரைன் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை