கொவிட்–19: பிரேசிலில் புதிய உச்சம்: தென்னாபிரிக்காவில் அதிக உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளான பிரேசிலில் 68,000 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு தென்னாபிரிக்காவில் நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது.

பிரேசிலில் கடந்த புதன்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாளில் 67,860 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 19 ஆம் திகதி 54,771 பேருக்கு தொற்று ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை விஞ்சுவதாக உள்ளது. பிரேசிலில் மொத்தம் 2.2 மில்லியன் வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் இருப்பதோடு இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,183 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன்மூலம் அந்நாட்டில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 394,948 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் மொத்த தொற்றுச் சம்பவங்கள் 2,227,514 ஆக அதிகரித்திருப்பதோடு 82,771 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,284 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை ஆபிரிக்க பிராந்தியத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட தென்னாபிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இது அந்நாட்டில் ஒருநாளில் பதிவான அதிக உயிரிழப்பாகும்.

தென்னாபிரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை