கருணா அம்மானுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ் மக்களது ஆதரவைப் பெற முயற்சிப்பதாக விமல் குற்றச்சாட்டு

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ள கருத்து வெறுக்கத்தக்கது. அவருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது என கைத்தொழில் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

யுத்த காலத்தில் இராணுவத்தினரை தான் கொன்றதாக குறிப்பிட்டு பெருமைப் பட்டுக் கொள்ளும் செயற்பாடு வெறுப்புக்குரியது. இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே கருணா அம்மான் தான் யுத்த காலத்தில் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகால சம்பவங்களை மீள மீட்டுவது இரு தரப்பிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து தான் பாவம் இழைத்துள்ளேன் என்றே கருணா அம்மான் வருத்தப்பட வேண்டும். இவ்வாறு இராணுவத்தினரை கொன்றதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவது தவறான செயற்பாடாகும்.

இவர் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நீதிமன்றம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தமாட்டோம். இவருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது. கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்களுக்கு முக்கியதுறைகள் அரசியல்வாதிகளினால் பயன்படுத்தப்பட்டன. அதன் விளைவினை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

தற்போது சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். கருணா அம்மான் எத்தரப்பிற்கு ஆதரவாக அரசியல் செய்கின்றார் என்பது எமக்கு அநாவசியமான விடயம். விசாரணைகளை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Wed, 06/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை