மக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது

கொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது.

இதில் மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலை படிப்படியாக திறக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டபோதும் இஸ்லாத்தின் புனிதத் தலமான மக்கா பெரிய பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இதன்படி சவூதியில் உள்ள 90,000க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன. எனினும் பள்ளிவாசலுக்குள் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டிருப்பதோடு தனிப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தவும் குறைந்தது 2 மீற்றர் இடைவெளியில் தொழுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கைலாகு கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள், 15 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் மற்றும் நாட்பட்ட நோய் உடையவர்கள் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தொழுகைக்கு முன்னரான கை,கால் மற்றும் முகத்தை கழுவும் சடங்கை வீட்டில் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் உலகெங்கும் இருந்து மில்லியன் கணக்கான யாத்திரிகர்கள் வருகை தரும் உம்றா மற்றும் ஹஜ் கடமை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 30 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சவூதி அரேபியாவில் 83,300க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக மூடப்பட்டிருந்த ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகம் வழிபாட்டாளர்கள் மற்றும் வருகைதருவோருக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

எனினும் சவூதியில் உள்ள மக்கா மற்றும் மதீனாவுக்கு அடுத்து இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸாவில் வைரஸ் தொற்றுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல் மற்றும் அதன் தரைப்பகுதியில் தொழ வருபவர்கள் முகக் கவசம் அணிந்து, சொந்தமாக விரிப்புகளை கொண்டுவர நிர்வாக கட்டுப்பாடு விதித்துள்ளது. நேற்று பள்ளிவாசல் திறக்கப்படும் முன் வெளியே நுற்றுக்கணக்கான வழிபாட்டாளர்கள் முகக் கவசங்களை அணிந்து ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்று குரலெழுப்பினர். இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர் ஒமர் அல் கிஸ்வானி இதுவரை காலமும் அமைதி காத்ததற்காக நன்றி கூறி அவர்களை வரவேற்றனர்.

தொடர்ந்து பள்ளிவாசல் வளாகத்தில் அதிகாலைத் தொழுகையில் சுமார் 700 பேர் பங்கேற்றனர்.

 

Mon, 06/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை