சீனத் தலைநகரில் புதிதாக 36 பேருக்கு வைரஸ் தொற்று

சீனத் தலைநகர் பீஜிங்கில் புதிதாக மேலும் 36 பேருக்கு உள்நாட்டிலேயே நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கம் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையே மேலும் 36 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நகரில் அதற்கு முன் 50 நாட்களுக்கு மேலாக எந்த நோய்த் தொற்று சம்பவமும் பதிவாகி இருக்கவில்லை.

வைரஸ் மேலும் பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருப்பதாக சீன துணை பிரதமர் சன் சுன்லான் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

பீஜிங்கில் இருக்கும் மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தையுடன் தொடர்புபட்டே புதிய நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

சந்தையின் பொது முகாமையாளர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பணி நீக்கப்பட்டுள்ளனர்.

பீஜிங்குடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் வைரஸ் தொற்று சம்பவங்கள் லியோனிங், ஹபெய் மற்றும் சிச்சுன் ஆகிய மூன்று மாகாணங்கள் பதிவாகியுள்ளன.

சந்தையில் உள்ள மீன்களை வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டதோடு அருகாமையில் இருக்கும் 21 சுற்றுப்புற பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அங்குள்ள சுமார் 46,000 குடியிருப்பாளர்களிடம் வைரஸ் தொற்றுக்கான சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிறன்று ஆயிரக்கணக்கானோர் சோதனைக்காக வரிசையில் காத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை