ஈழ விடுதலை போராட்ட வீரர்களை சுமந்திரன் கொச்சைப்படுத்தியுள்ளார்

ஈழ விடுதலை போராட்டத்துக்கு தம்மை அர்ப்பணித்த அனைத்து விடுதலை போராட்ட இயக்கங்களையும், அதில் உயிர்நீத்த அத்தனை போராளிகளையும் கொச்சைப்படுத்தியது போலவே சுமந்திரன் கூறிய கருத்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது கருத்தானது எம்மை பொறுத்தவரை புதிய விடயமல்ல. கூட்டமைப்பில் சுமந்திரனது வருகைக்கு பின்னர் கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் உரிமை சார்ந்த ஆயுதப் போராட்டத்தையும், தீர்வுக்காக அவர்கள் அடைந்த அத்தனை தியாகங்களையும் அவர் கொச்சைப்படுத்துவது இது முதற்தடவையல்ல.

போர் குற்ற விடயங்களில் இராணுவத்தை மட்டுமல்லாது விடுதலைப் புலிகளையும் உள்வாங்கவேண்டும் என்ற கருத்துக்களை பல தடவைகள் அவர் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார். நாம் அதற்கான கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றோம். ஆனால் கூட்டமைப்பின் பங்காளிகட்சிகள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே சுமந்திரனின் கருத்துக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் தெரிவிக்காமல் தங்களுடைய சுயலாப அரசியலை தக்கவைப்பதற்காக வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள்.

சுமந்திரனும், சம்பந்தனும் எங்கே கை அசைக்கின்றார்களோ அதற்கு ஆதரவு வழங்கும் நிலையிலேயே அவர்கள் இருப்பதுடன் ஒரு துரும்பைகூட சுமந்திரனுக்கு எதிராக தூக்கிபோடமுடியாத நிலையே அவர்களிடம் உள்ளது. இவர்கள் வழங்கிய துணிச்சலே சுமந்திரன் அவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பதற்கான காரணம்.

தமிழர்கள் விடயத்தில் சர்வதேச சமூகத்தையும் ஐ.நா மனித உரிமைப் பேரவையையும் திரும்பிப் பார்க்க வைத்தது ஆயுதப்போராட்டமே.

அதனை கொச்சைப்படுத்தியவர்களிற்கு எதிராக மக்கள் தகுந்த பாடத்தை வழங்குவார்கள்.

இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்த போது அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமல் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கிவிட்டு சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியமைத்துள்ளவர்களிடமிருந்து அரசியல் தீர்வையோ அல்லது அரசியல் கைதிகளின் விடுவிப்பையோ எதிர்பார்க்க முடியாது.

சுமந்திரன் மற்றும் பிரதமருடனான சந்திப்பின் மூலம் எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படபோவதில்லை. இது வெறுமனே பாராளுமன்ற தேர்தலிற்கான நாடகமாகவே இருக்கும் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

 

Fri, 05/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை