18ஆம் திகதி 6.18க்கு வீடுகளில் விளக்கேற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்

சீ.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் மாலை 6:18 க்கு மக்கள் தமது வீடுகளில் விளக்குகளை ஏற்றி இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிப்பதில் நாம் பலவிதமான தடங்கல்களை எதிர்நோக்குகின்றோம். முள்ளிவாய்க்காலுக்கு சென்று எங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றி மௌனமாக இறந்தவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கின்றதோ என்று எங்களுக்கு கூற முடியாது இருக்கின்றது.

அவ்வாறு செய்யக் கூடியவர்கள் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மௌனமாக அஞ்சலி செலுத்தி வரக்கூடும் என்றால் மிகவும் நன்று. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பொலிஸ், படையினர் ஆகியோரின் எதிர்ப்புகள் இவற்றில் இருப்பதை நான் காண்கின்றேன்.

அதில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் அவ்வாறானவர்களை தடுப்பு முகாமுக்கு கொண்டு போக எத்தனிக்கின்றார்கள். அப்படியானால் 14 நாட்கள் அவர்களைக் கொண்டுபோய் வைத்து இருக்கக்கூடும். ஆகவே முடியுமான மக்கள் அங்கு சென்று தங்களுடைய மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம் நாங்கள் நடவடிக்கையில் இறங்கலாம்.

ஆனால் எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் இரண்டு விடயங்களை அன்றைய தினம் செய்ய இருக்கின்றோம்.இறந்த மக்களினுடைய நினைவாக பயன்தரும் மரங்களை நாட்ட இருக்கின்றோம். அது சம்பந்தமாக அந்தந்த மாவட்டங்களில் ஒருத்தரை அடையாளப்படுத்தி அவர்களுக்கு ஊடாக நாங்கள் மரங்களை வாங்கியும், பெற்றும் மக்களுக்கு தேவையானவர்களிடம் மரங்களை கொடுத்து தங்களுடைய வீட்டிலும் பயன்தரும் மரங்களை நாட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதை 16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அது ஒரு முக்கியமான பெட்டகம் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால் வெறுமனே எங்களுடைய மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றுவதோடு நின்றுவிடாமல் வரும் காலத்திலே எங்களுடைய இறந்த உறவுகள் எதை நோக்கி எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டார்களோ அதாவது எங்களுடைய வடக்கு, கிழக்கு தாயகப் பிரதேசம் நன்றாக முன்னேறவேண்டும், செழிக்க வேண்டும். அத்தோடு எல்லா விதத்திலும் நல்லதொரு நிலையை அடைய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அதைவிட உலகம் பூராகவும் எங்களுடைய தமிழ் உறவுகள் அன்றைய தினம் 18.18.18 க்கு அதாவது 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலே இறந்தவர்களை நினைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும். இது இலங்கையில் மாத்திரமன்றி எத்தனையோ நாடுகளிலே அன்றைய தினம் நடைபெறுகின்றது என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 05/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை