வடக்கிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட இ.போ.ச பேருந்து சேவைகள்

வவுனியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு வந்த போதும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதுடன் வடமாகாணத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்களும் நடைபெற்றன.

கொவிட் - 19 காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது நேற்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு 23 மாவட்டங்களில் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைவாக வவுனியாவில் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் என்பன திறக்கப்பட்டு இயங்கியதுடன், முச்சக்கர வண்டி, பேருந்து போக்குவரத்துக்களும் நடைபெற்றன.

வவுனியாவில் இருந்து வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கிடையில் இ.போ.சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. இதன்போது அரச, தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் பாஸ் உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டதுடன் பேருந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளுடன் சுகாதார நடைமுறைகள் பின்பற்றியே சேவைகள் நடைபெற்றன.

அத்துடன் வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம், பூவரசங்குளம், நெடுங்கேணி உள்ளிட்ட உள்ளூர் சேவைகளும் நடைபெற்றிருந்தன. இயல்பு நிலை ஏற்பட்ட போதும் நகரப் பகுதியில் மக்களது நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதேவேளை சிகையலங்கார நிலையங்கள், மதுபானசாலைகள் என்பன மூடப்பட்டு இருந்தன. 

வவுனியா விசேட நிருபர்

Tue, 05/12/2020 - 11:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை