300,000ஐ தாண்டிய கொவிட்-19 உயிரிழப்பு

கொரோனா வைரஸினால் உலகில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டியதோடு நோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.5 மில்லியனாக அதிகரித்திருப்பதாக சுகாதார அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

உயிரிழப்புகளில் கால் பங்கிற்கும் அதிகமானது அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. பிரிட்டன் மற்றும் இத்தாலியில் 10 முதல் 11 வீதமான உயிரிழப்புகள் பதிவானதோடு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் அது 9 வீதமாக உள்ளது.

கொவிட்-19 வைரஸ் உயிழப்புகள் வெறும் நான்கு மாதங்களுக்குள் நிகழ்ந்திருப்பதோடு இது உலகின் மிகப்பெரிய ஆட்கொல்லி நோய்களில் ஒன்றாக இருக்கும் மலேரியாவால் ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் சுமார் முக்கால் பகுதிக்கு சமமாகும்.

எனினும் இதற்கு முன் உலகைப் பாதித்த உலகளாவிய தொற்றான 1918 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலை விடவும் இந்த வைரஸினால் உயிரிழப்பவர்களின் போக்கு மிக மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஏற்பட்ட வைரஸ் தொற்று சுமார் 500 மில்லியன் மக்களை தாக்கியதோடு அதில் குறைந்தது 10 வீதமானவர்கள் உயிரிழந்தனர்.

முதலாவது கொவிட்-19 உயிரிழப்பு அது முதலில் தோன்றிய நகரான சீனாவின் வூஹானில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி பதிவானது. இந்த உயிரிழப்பு 100,000ஐ தாண்டுவதற்கு 91 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் மேலும் 16 நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 200,000 இலட்சத்தை தாண்டியதாக உத்தியோகபூர்வ கணக்கெடுப்புகள் காட்டுகின்றன.

உயிரிழப்பு எண்ணிக்கை 200,000 இல் இருக்கும் 300,000 ஐ அடைவதற்கு மேலும் 19 நாட்கள் சென்றுள்ளன.

அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் 86,000 இற்கு மேல் என்பதோடு பிரிட்டன் மற்றும் இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை 30,000க்கும் அதிகமாகும். அதேபோன்று பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 27 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகள் பட்டியில் பிரேசிஸ் ஆறாவது இடத்திற்கு உயர்ந்தபோதும் அந்நாட்டில் ஒப்பீட்டளவில் 13,149 பேரே மாண்டுள்ளனர். எனினும் உயிரிழப்போர் எண்ணிக்கை அங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிரேசிலில் நாள்தோறும் சுமார் 700 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் அதிக மக்கள் செறிவு மற்றும் மோசமான சுகாதார வசதிகள் கொண்ட பகுதிகள் இருந்தபோதும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. எனினும் உண்மையான எண்ணிக்கை குறிப்பிடப்படுவதை விடவும் மிக அதிகமாக இருக்கலாம் என்று சுகாதார வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்றும் வேகம் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் அந்நாடுகள் முடக்க நிலையில் இருந்து மீண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றை முறியடிக்கும் முடக்கத்தைப் பல நாடுகள் தளர்த்திவந்தாலும், அதன் இரண்டாவது அலைகுறித்து அச்சம் நிலவுகிறது. மறுபுறம் ரஷ்யா மற்றும் பிரேசில் நாடுகளில் கொவிட்-19 தீவிரம் அடைந்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த வியாழக்கிழமையும் சுமார் 10,000 புதிய நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 262, 843 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உலகில் அதிக நோய்த் தொற்றாளர்கள் உள்ள நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. எனினும் ரஷ்யாவில் உயிரிழப்பு 2,418 ஆக பதிவாகி இருப்பது அந்நாடு பாதிப்பின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது என்ற சந்தேகத்தை வலுப்பெறச் செய்துள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் வேகமாக முன்னேறி வரும் பிரேசிலில் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த வியாழக்கிழமை புதிதாக 8,500 நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

எனினும் மக்கள் தொகை அடிப்படையில் அதிக உயிரிழப்பு பதிவான நாடாக பெல்ஜியம் உள்ளது. அங்கு 100,000 பேருக்கு 77 பேர் உயிரிழந்திருப்பதோடு அதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் 58 பேரும் இத்தாலியில் 52 பேரும், பிரிட்டனில் 50 பேரும் பிரான்சில் 42 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் மொத்தம் 1,825,812 நோய்த் தொற்று சம்பவங்களில் 162,654 பேர் உயிரிழந்திருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் கடந்த 24 மணி நேரத்தில் தென் சூடானில் முதல் கொவிட்-19 தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது.

 

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை