லண்டனில் மிக வேகமாக தணிகிறது கொரோனா!

சீனாவில் ஒரு மாதமாக உயிரிழப்புகள் கிடையாது

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாள் ஒன்றுக்கு 24 பேருக்கும் குறைவானவர்களே தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை 2 இலட்சத்து 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இது குறித்த ஆய்வினை  இங்கிலாந்து பொது சுகாதாரம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இணைந்து  நடத்தின.

 லண்டனில் தினமும் 24 பேருக்கும் குறைவானவர்களே புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு 3.5 நாட்களுக்கும் பாதியாகக் குறைகிறது. ஆரம்ப கட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட லண்டன் இப்போது பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் உள்ளது.

 லண்டனில் உள்ள சுமார் 15 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததால்  அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

இதனால் அவர்களுக்கு மீண்டும் வைரஸ் பரவுவது கடினம்.மேலும் பலர் வீடுகளில் இருந்தே பணி புரிவதால்  வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்கின்றனர்.

இதுவும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இப்படியாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையும் பட்சத்தில் ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை அழிக்க முடியும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை.

 சீனாவில் கொரோனா தொற்றுக்கு 82,933 பேர் பாதிக்கப்பட்டு, 4,633 பேர் பலியாகினர். தேசிய சுகாதார ஆணையகம் வெளியிட்ட தகவலின்படி சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஜிலினில் உள்ளூர் பரவல் காரணமாக கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக ஏப்ரல் 14ம் திகதி கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக கொரோனா இறப்பு பதிவாகவில்லை.

Sat, 05/16/2020 - 06:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை