கொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் 'இரண்டாவது அலை' தாக்கம் பற்றி கடும் எச்சரிக்கை

கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்குதலை தளர்த்துவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் பற்றி சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது மேலும் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் அச்சம் நிலவி வருகிறது.

“நாம் சகிக்க முடியாத பின்னடைவுக்கான அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளோம்” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்புக்கான மையத்தின் மருத்துவர் இயன் லிப்கின் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனி நிர்வாகம் வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. புதிதாக நோய்த் தொற்றியவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டறிவதை இத்தாலி தீவிரப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அமுல்படுத்தியிருக்கும் முடக்க நிலையை இன்னும் தளர்த்தாத சூழலில் இந்த வைரஸின் புதிய அலை குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.

“இரண்டாவது அலை ஒன்று இருக்கும் ஆனால் பிரச்சனை எந்த அளவு நீடிக்கும் என்று கணிக்க முடியாது. அது சிறிய அலையா அல்லது பெரிய அலையா என்பது பற்றி இப்போதைக்கு கூற முடியாது” என்று பிரான்சின் பஸ்சர் நிறுவன வைரஸ் தொற்று பிரிவுத் தலைவர் உலிவியர் ஸ்சார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.    

அமெரிக்காவில் சுமார் பாதி அளவான மாநிலங்களில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, மக்கள் இடைவிடாது வீட்டை விட்டு வெளியேறும் அளவு அதிகரித்திருப்பதாக கைபேசி தரவுகளை மேற்கொள்காட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுச் சுகாதார நிர்வாகத்தை கவலைகொள்ளச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமானது என நிபுணர்கள் கருதும் தீவிர மருத்துவ சோதனைகளை பல மாநிலங்களும் மேற்கொள்ளத் தவறியுள்ளன. 

அமெரிக்காவில் 14 நாட்களில் புதிய நோய்த் தொற்று மற்றும் பாதிப்பில் குறைவு அடைந்திருக்கும் நிலையில் முடக்கநிலையை தளர்த்துவது தொடர்பில் டிரம்ப் நிர்வாகத்தின் வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதில் பல ஆளுநர்களும் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

“முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தினால், துரதிருஸ்டவசமாக மேலும் பல உயிரிழப்புகள் மற்றும் நோய்த் தொற்றுகளை நாம் சந்திக்க வேண்டி வரும்” என்று வொசிஷ்டன் கெய்சர் பமிலி அறக்கட்டளையின் உலக சுகாதார கொள்கைகளுக்கான பணிப்பாளர் ஜோஷ் மிசவுட் தெரிவித்தார்.    ஆளுநர்கள் முடக்க நிலையை தளர்த்தியதைத் தொடர்ந்து அயோவா மற்றும் மிசவுரி மாநிலங்களில் புதிய சம்பவங்கள் திடமாக அதிகரித்து வரும் அதேவேளை, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

மதுபான விடுதிகள் மீண்டும் திறக்கப்படுவது மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது தமது கட்டுப்பாடுகளை இழப்பதோடு, விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியன மிக ஆபத்தான இரண்டு விடயங்களாகும் என்று லிப்கின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகெங்கும் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு உயிரிழப்பு கால் மில்லியனை எட்டியுள்ளது. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், உயிரிழப்பு எண்ணிக்கையை கணிப்பதில் நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் சில அரசுகள் உண்மையான எண்ணிக்கையை மறைப்பது போன்ற காரணிகளால் இதன் பாதிப்பு அளவு குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.   

கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக உள்ள அமெரிக்காவில் 76 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதோடு 1.2 மில்லியன் பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் ஐரோப்பாவில் 140,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 

குறிப்பாக ரஷ்யாவில் வைரஸ் தொற்று தீவிரம் கண்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளை பின்தள்ளி ரஷ்யாவில் 177,000 க்கும் அதிகமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஆசியாவில் கொவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐக் கடந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் முதன்முறை வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஆசியா இந்த நிலையை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களில் சுமார் 4,600 பேர் சீனாவைச் சேர்ந்தவர்களாவர். அதையடுத்து, இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

வைரஸ் பரவலால் முன்னர் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த தென் கொரியா, சீனா, தாய்வான், ஹொங்கொங் ஆகியன தற்போது வழக்க நிலைக்குத் திரும்பி வருகின்றன.

இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வைரஸ் பரவலை நிலைப்படுத்தப் போராடி வருகின்றன.

குறிப்பாக பாகிஸ்தானில் ஒரே நாளில் 1,764 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் முடக்கநிலை நீக்கப்படவிருக்கும் வேளையில் இத்தகவல் வெளியானது. புதிதாய் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,000ஐத் தாண்டியுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்திருப்பதோடு, பாகிஸ்தானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 594 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாடு, பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

ஆனால், வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இதேவேளை ஆபிரிக்காவில் போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் கொவிட்-19 வைரஸினால் 1 இலட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு பற்றி உலக சுகாதார அமைப்பின் ஆபிரிக்கா பிரிவு 47 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.  இதுபற்றி அந்த அமைப்பின் ஆபிரிக்காவுக்கான மண்டல இயக்குனர் மத்ஷிதிசோ மொயத்தி அறிக்கையில் தெரிவித்துள்ள செய்தியில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதிய அளவு மேற்கொள்ளவில்லை எனில், நோய் தொற்று ஏற்பட்ட முதல் ஆண்டில் ஆபிரிக்காவில் பலி எண்ணிக்கை 83 ஆயிரம் முதல் 1 இலட்சத்து 90 ஆயிரம் வரை செல்லக் கூடும். இதுவே பாதிப்பு எண்ணிக்கையானது 2.9 முதல் 4.4 கோடி வரை செல்லக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ளது போன்று வேகமாக பெருகாவிட்டாலும், நெரிசல் மிக்க பகுதிகளில் மெல்ல பரவும் என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார். ஆபிரிக்காவில் அடுத்த பல ஆண்டுகளுக்கு அன்றாட வாழ்வில் ஒரு பிரச்சினையாக கொரோனா பாதிப்பு மாறக் கூடும். 

அதனால் பல நாட்டு அரசுகளும் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.  நாம் கொரோனா பாதிப்பு பற்றி சோதனை செய்து, கண்டறிந்து, தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Sat, 05/09/2020 - 13:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை