தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதியை அந்தந்த பொலிஸ் நிலையங்களில் பெறலாம்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரதேசங்களில் பிரசாரங்களையும் மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொள்ள விசேட பாஸ் அனுமதிகளை  அந்தந்த பொலிஸ் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களிலுள்ள பெயர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் அந்த நாள் முதல் தமக்குரிய பொலீஸ் பாஸ் அனுமதிப்பத்திரங்களை தத்தமது பொலிஸ் நிலையங்களில் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஒரு மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு மாவட்டத்தில் பாஸ் அனுமதியை பெற முடியாது. தமது மாவட்டத்துக்குள் மாத்திரமே அவர் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தமக்கு ஆதரவு அளிக்குமாறு கோரவும் தமது கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் கொள்கை விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் ஊரடங்கு காலத்தில் இந்தப் பாஸ்களை பயன்படுத்த முடியும்.

ஆனால் இந்தப் பாஸ் நடைமுறையை வைத்துக்கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக பணத்தையோ உணவுப் பொருட்களையோ மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் நிவாரண உதவியாக வழங்க முற்பட்டால் தேர்தல் முறைகேடாக கருதப்பட்டு அந்த நபர் கைது செய்யப்படலாம் என்பதையும் ஆணைக்குழு தலைவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். தம்மிடம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள  உதவுமாறு வேட்பாளர்கள் சிலர்  விடுத்த கோரிக்கைகளை அடுத்து ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவித்தலை  விடுத்திருக்கின்றார்.

எம் ஏ எம் நிலாம்

Mon, 04/27/2020 - 08:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை