வீட்டுக்குள் புகுந்து குடும்பஸ்தர் மீது கொலைவெறி தாக்குதல்

ஊரடங்கு நேரத்தில் பொலிஸார் அராஜகம்
யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் வீடொன்றுக்குள் நூழைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் வீட்டிலிருந்தவரை கடுமையாக தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் விசாரணை அறிக்கையையும் கோரியுள்ளது.

இது தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கனகராஜ் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிப் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த 6 பொலிஸார் வீட்டிலிருந்த குடும்பஸ்தரை சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வெளியாகி இதனை சமூக ஊடகங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் அறியக்கூடியதாக இருந்தது.

இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டது.   அந்த வீட்டில் உள்ள குடும்பஸ்தரை தாக்கியது தொடர்பான காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பொலிஸார் மீதும் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர் 

Wed, 04/22/2020 - 08:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை