31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: கம்பஹா மாவட்டம் 6வது தடவையாகவும் சம்பியன்

31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாகவும் கம்பஹா மாவட்டம் சம்பியனாக தெரிவானது.

இவ்வருடம் நடைபெற்ற போட்டிகளில் 119 புள்ளிகளைப் பெற்று கம்பஹா மாவட்டம் முதலாம் இடத்தையும், இவ்வருடத்திற்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. 112 புள்ளிகளைப் பெற்ற குருநாகல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 106 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சும்,தேசிய இளைஞர் சேவை மன்றம்,இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அநுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டரங்கில் வைபவ ரீதியாக ஆரம்பமானது.

இம்முறை விளையாட்டுப் போட்டியில் 20 வயதின் மேல் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 1:54.40 மணி நேரத்தில் ஓடி முடித்து ஏற்படுத்திய சாதனையை 18 வருடங்களின் பின்னர் இம்முறை பதுளை மாவட்டத்தை சேர்ந்த சந்திர குமார் அரவிந்தன் அச்சாதனையை 1:54.24 நேரத்தில் ஓடி முடித்து ஏற்கனவே இருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளதுடன் மூன்று புதிய சாதனைகள் இம்முறை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்வில் 20 வயதின் கீழ் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் 5.07 மீற்றர் தூரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சதீபா என்டர்ஸன் தெரிவு செய்யப்பட்டதுடன்,20 வயதின் கீழ் சிறந்த வீரராக நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் 7.38 மீற்றர் தூரம் பாய்ந்த கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த வை.சீ.எம்.யோதசிங்க தெரிவு செய்யப்பட்டார்.20 வயதின் மேல் சிறந்த வீராங்கனையாக 100 மீற்றர் தடைதாண்டல் நிகழ்ச்சியில் 14.47 நேரத்தில் ஓடி முடித்த களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த டப்ளியூ. வீ.லக்‌ஷிகா சுகந்தி தெரிவு செய்யப்பட்டதுடன்,20 வயதின் மேல் சிறந்த வீரராக உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் 2.08 மீற்றர் உயரம் பாய்ந்த காலி மாவட்டத்தைச் சேர்ந்த பீ.ஆர்.ஐ.யூ.குமார தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விளையாட்டு போட்டி நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வுகள் இம்மாதம் 01 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு இளைஞர் விவகார, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் தெஷார ஜயசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கா மற்றும் உயர் அதிகாரிகள் தேசிய இளைஞர் மன்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.இவ்வருடம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கம்பஹா மாவட்டத்திற்கு சம்பியன் கிண்ணமும்,150,000 பணப்பரிசும்,இரண்டாம் இடத்தைப் பெற்ற குருநாகல் மாவட்டத்திற்கு கிண்ணமும் 100,000 பணப்பரிசும்,

மூன்றாம் இடத்தைப் பெற்ற கொழும்பு மாவட்டத்திற்கு 75,000 பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன், சிறந்த வீர, வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட 20 வயதின் மேல்,20 வயதின் கீழ் ஆகிய நான்கு பேருக்கும் பெறுமதியான மோட்டார் சைக்கில்களும் வழங்கப்பட்டது. இந்த வருடம் புதிய மூன்று சாதனைகள் ஏற்படுத்தப்பட்டது.

20 வயதின் மேல் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதுளை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.அரவிந்தன் 1:54.24 நேரத்தில் ஓடி முடித்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.இந்த 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.டீ.டப்ளியூ.சில்வா 1:54.40 நேரத்தில் ஓடி முடித்து நிலைநாட்டப்பட்ட சாதனையை இதற்கு முன்னைய சாதனையாக காணப்பட்டது.இச்சாதனையை 18 வருடங்களின் பின்னர் எஸ்.அரவிந்தன் முறியடித்துள்ளார்

20 வயதின் கீழ் பெண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் 41.13 மீற்றர் தூரம் வீசிய இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எச்.ஏ.வீ.லிஹினி கெளசல்யா கபுஆரச்சி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.ஏற்கனவே 2011 ஆம் ஆண்டில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எச்.டீ.எச்.கருணாரத்ன வீராங்கனையால் 40.01 மீற்றர் வீசிய தூரம் இதற்கு முன்னைய சாதனையாக காணப்பட்டது.

20 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் 7.38 மீற்றர் தூரம் பாய்ந்த கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த வை.சமோத் யோதசிங்க புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த டப்ளியூ.பீ.ஈ.ஜயசிறி என்பவரினால் 7.34 தூரம் பாய்ந்த சாதனையே இதற்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட சாதனையாக காணப்பட்டது.

( கல்நேவ தினகரன் விசேட நிருபர் )

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை