மட்டு.தன்னாமுனை மியானி நகரில் கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்கள் திறப்பு

மட்டக்களப்பு - தன்னாமுனை மியானி நகரில் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கரப்பந்து மைதானம் மற்றும் கூடைப்பந்தாட்டத்திற்கான சகல வசதிகளையும்கொண்ட உள்ளக விளையாட்டரங்கு என்பன சம்பிரதாயபூர்வமாக அண்மையில் திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மறைந்த லீலா மாஸ்டர் நினைவாக அவரது குடும்ப உதவியுடன் இவ்விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தன்னாமுனை சொமஸ்கன் திருச்சபை அருட் தந்தையர்களது பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜி. மகிமைதாஸ், வி. இருதயராஜ் மற்றும் மறைந்த லீலா மாஸ்டரின் புதல்விகளான தேன்மொழி தர்மராஜா, மஞ்சுளா சிங்கராஜா உள்ளிட்ட பலர் பிரசன்னமாயிருந்தனர்.

மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா பூஜை வழிபாடுகள் செய்தது திருப்பலி ஒப்புக்கொடுத்தார். தன்னாமுனை சொமஸ்கன் திருச்சபை அருட் தந்தையர்களும் இதில் இணைந்திருந்தனர். இதையடுத்து கேக் வெட்டி வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மியானி கிராம சிறுவர்களது நலன்கருதி இவ்விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இம்மைதானம் நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் விளையாட்டு ஆர்வலர்கள் பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஏறாவூர் குறூப் நிருபர்) 

 

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை