இறுதி டெஸ்டிலும் இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து

இந்தியா அணிக்கெதிரான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-–0 என்ற கணக்கில் நியூஸிலாந்து வென்று, இந்தியாவை வயிட் வொஷ் செய்துள்ளது.

கிறிஸ்ட்சேர்ச் மைதானத்தில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஹனுமா விஹாரி 55 ஓட்டங்களையும், பிரீத்வி ஷா மற்றும் செடீஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீஸன் 5 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நெய்ல் வாக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் நியூஸிலாந்து அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக, டொம் லதம் 52 ஓட்டங்களையும், கெய்ல் ஜேமீஸன் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 7 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணிக்கு 132 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக, செடீஸ்வர் புஜாரா 24 ஓட்டங்களையும், ஜடேஜா ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இதில் நியூஸிலாந்து அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக மொம் பிளெண்டல் 55 ஓட்டங்களையும், டொம் லதம் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக கெய்ல் ஜேமீஸன் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக டிம் சவுத்தி தெரிவுசெய்யப்பட்டார்.

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை