நாட்டின் 22 மில்லியன் மக்களின் பாதுகாப்பை கருதி அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது

இராணுவ பேச்சாளர்

நாட்டின் 22 மில்லியன் மக்களின் பாதுகாப்பை கருதியே புணானை மற்றும் கந்தக்காட்டில் அவசர மருத்துவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், அதனை எவரும் இத்தருணத்தில் பொருட்படுத்தக் கூடாது. ஒருநாடாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் இங்கு செய்துள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இத்தாலி, தென் கொரியா உட்பட கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே புணானை மற்றும் கந்தக்காட்டில் அவசர மருத்துவ சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உணவு முதல் வை.பை.வசதிவரை அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உடைகளை கழுவவும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிற்றூண்டிச்சாலை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. கழிவறை வசதிகள் இல்லையென எவரும் கூறினால் அவை போலியான குற்றச்சாட்டுகளாகும். நாடு என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய அனைத்து உதவிகளும் இவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

நாட்டின் 22 மில்லியன் மக்களின் பாதுகாப்பை கருதி அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது. ஆகவே, இங்கு சில குறைப்பாடுகள் இருந்தால் அதனை பொருட்படுத்தக் கூடாது. இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக கருதி அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஸாதிக் ஷிஹான், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை