ஹோமாகமவில் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

அமைச்சர் டலஸ் அழகப்பெரும

விளையாட்டு திறமைகளை விருத்தி செய்து சர்வதேச அரங்கில் வெற்றிகளை தனதாக்கி கொள்வதற்காக சிறுவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம் ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதான வளாகத்தில் நிர்மாணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் 220 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாறை செனரத் சோமரட்ன விளையாட்டுத் தொகுதி மாணவர் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (04) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே -

நாட்டின் அபிவிருத்திக்கு விளையாட்டு துறை ஆரோக்கியமான ஒன்றாகும். ஒழுக்கமானதும் ஆரோக்கியமானதுமான சிறார்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்வதற்காக விளையாட்டு பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை பிரகடணத்தில் குறிப்பிட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்நாட்டின் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாகும். விசேடமாக பாடசாலையின் முதலாம் தவனை காலத்தின் போது பாடசாலை உள்ளக விளையாட்டு போட்டி, பிக்மெச், கல்வி சுற்றுலா போன்ற வெளிவாரியான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது சிறுவர்களின் ஆரோக்கியத்தையும் செயற்பாட்டு திறனையும் விருத்தி செய்வதற்காகும். விளையாட்டு போன்ற வெளிவாரியான விடயதானங்களில் மாணவர்கள் ஈடுப்படுவதனை தடுக்க பெற்றோர்கள் ஒருபோதும் முனையக் கூடாது

பாடங்களை மனனம் செய்து பரீட்சை எழுதும் கலாசாரத்திற்கு பதிலாக செயற்பாடுகளுடன் கூடிய முறைமையின் ஊடாக மாணவர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப்படுவதன் காரணமாக பின்லாந்து போன்ற நாடுகள் கல்வி துறையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன என்றார்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான விமலவீர திசாநாயக்க, சிறியானி விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எச்.எம். வீரசிங்க, நகர மேயர் சமிந்த சுகத், விளையாட்டுத் திணைக்கத்தின் உயர் அதிகாரிகள், உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)

Wed, 03/11/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக