வடக்கு,கிழக்கு வீரர்கள் 12 பதக்கங்கள் பெற்று சாதனை

இளைஞர்களின் திறமைகளை வெளிக்காட்டும் 31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இவ்வருடம் ( 2020) அநுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 01 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றது.

இவ்வருடம் வடக்கு, கிழக்கு முஸ்லிம், தமிழ் வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை காட்டி பல சாதனைகளை புரிந்து 12 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு இரண்டு தங்கப்பதக்கங்களும்,இரண்டு வெள்ளிப் பதக்கங்களும்,மூன்று வெண்கலப் பதக்கங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.இதில் ஒரு தங்கப்பதக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும், ஒரு தங்கப்பதக்கம் வவுனியா மாவட்டத்திற்கும் கிடைக்கப் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு ஒரு வெள்ளிப்பதக்கமும், நான்கு வெண்கலப் பதக்கங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.இதன்படி

20 வயதின் கீழ் ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.நிசோபன் 35:16.10 நிமிடத்தில் ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன்,20 வயதின் கீழ் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் .மிதுன்ராஜ் 42.58 மீற்றர் தூரம் வீசி முதலாம் இடத்தினையும் பெற்று வடக்கு மாகாணத்திற்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

20 வயதின் கீழ் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.தனுசியா இரண்டாம் இடத்தினையும்,20 வயதின் மேல் ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த என் உதயங்கனி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.20 வயதின் மேல் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எம்.நிப்ராஸ் மூன்றாம் இடத்தினையும் 20 வயதின் மேல் பெண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.நர்மதா மூன்றாம் இடத்தினையும்,தட்டெறிதல் நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாவட்டதைச் சேர்ந்த ஆர்.சுஜீபா மூன்றாம் இடத்தையும் குண்டெறிதல் நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த என்.உதயங்கனி இரண்டாம் இடத்தினையும்,பெற்றுக் கொண்டனர்.

20 வயதின் கீழ் ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கே.பவித்திரன் இரண்டாம் இடத்தினையும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.எம்.ரிஸ்வான் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதே வயதுப் பிரிவில் ஆண்களுக்கான ஈட்டியெறிதல் போட்டி நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம்.ரிகான் மூன்றாம் இடத்தினையும், 20 வயதின் மேல் ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சதீசன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

( கல்நேவ தினகரன் விசேட நிருபர்)

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை