86ஆவது புனிதர்களின் கிரிக்கெட் சமர்: சமநிலையில் முடிவு

புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான 86 ஆவது புனிதர்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 64 ஆவது தடவையாக சமநிலையில் நிறைவடைந்தது.

பீ சரா ஓவல் மைதானத்தில் சனிக்கிமை (07) நிறைவடைந்த இந்தப் போட்டியில் 191 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாவது நாளை ஆரம்பித்த தினெத் ஜயகொடி மற்றும் சதீஷ் ஜயவர்தன மேலும் 44 ஓட்டங்களை சேர்த்தனர். இவர்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு பெற்ற 192 ஓட்ட இணைப்பாட்டம் இந்தத் தொடரில் ஐந்தாவது விக்கெட்டுக்கு பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். இதற்கு முன்னர் 1938 இல் ஜோ மிசோ மற்றும் பட்ரிக் பெரேரா பெற்ற 158 ஓட்ட இணைப்பாட்ட சாதனையையே இவர்கள் முறியடித்தனர்.

235 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த புனித ஜோசப் கல்லூரி​ சதம் பெற்ற தினெத் ஜயகொடி ஆட்டமிழந்த பின் வீழ்ச்சி காண ஆரம்பித்தது.

அபாரமாக ஆடிய தினெத் ஜயகொடி 130 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 122 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் சதீஷ் ஜயவர்தன 103 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றார். எஞ்சிய 6 விக்கெட்டுகளும் 22 பந்துகளில் 24 ஓட்டங்களுக்கு பறிபோயின.

இதன்படி முதல் இன்னிங்ஸில் 35 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரி ஆரம்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி பகல் போசண இடைவேளையின் பின் 67 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எவ்வாறாயினும் ரசிக்க தவட்டகே மற்றும் உப தலைவர் நிபுனக்க பொன்சேக்கா நான்காவது விக்கெட்டுக்கு 66 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நெருக்கடியில் இருந்து மீட்டனர். தவட்டகே 144 பந்துகளுக்கு முகம்கொடுத்து 68 ஓட்டங்களை பெற்றார். அவரது இளம் சகோதரர் முதல் நாளில் அரைச்சதம் ஒன்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி புனித பேதுரு அணி தேனீர் இடைவேளையின்போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இருந்து வலுவான நிலையை பெற்றது. எவ்வாறாயினும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே ஏழு பந்துகளுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி புனித ஜோசப் அணிக்கு நம்பிக்கையை தந்தார்.

ஒரு கட்டத்தில் 174 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த புனித பேதுரு கல்லூரி 179 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருவின் செனவிரத்ன மற்றும் டனல் ஹேமனந்த புனித ஜோசப் அணியின் எதிர்பார்ப்பை சிதறடித்தனர். இந்த இருவரும் அரைச்சதம் பெற்று கடைசிவரை களத்தில் இருந்ததன் மூலம் புனித பேதுரு கல்லூரி மொரிஸ் லே கொக் சவால் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது. இவர்கள் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக ஒன்பதாவது விக்கெட்டுக்கு 88 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இது 1968 இல் டோனி ஓபாத மற்றும் ரொட்னி பெட்டனோட் பெற்ற 53 ஓட்ட இணைப்பாட்ட சாதனையை முறியடிப்பதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 86 சமர்களில் புனித ஜோசப் கல்லூரி 12 தொடர்களை வென்று முன்னிலை பெற்றிருப்பதோடு புனித பேதுரு கல்லூரி 10 தடவைகள் வெற்றியீட்டியுள்ளது. ஏனைய அனைத்து போட்டிகளும் சமநிலையிலேயே முடிவுற்றன.

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை