அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழகம் வெற்றி

இறக்காமம் றெக்ஸ்டா இளைஞர் அமைப்பினால் நடாத்திய இரவு நேர மின்னொளியிலான அணிக்கு 07 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச் சேனை நியூ ஸ்டார் கழகம் வெற்றியீட்டியது.

றெக்ஸ்டா வெற்றிக் கிண்ணம் 2020 என பெயரிடப்பட்டு இறக்காமம் குளக்கரை மைதானத்தில் இறுதிப்போட்டி 01 திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழகத்தினர் 06 விக்கட்டுக்களால் வெற்றியீட்டனர்.

இரவுநேரப் போட்டியாக கடந்த 2020.02.20 திகதி இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பிரபலமான 50 க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிக்கு சம்பியன் கிண்ணத்தையும் ரூபா 40000 பெறுமதியான பணப்பரிசையும் வழங்கி வைத்தார்.

இறுதிப் போட்டியில் இறக்காமம் றெக்ஸ்டா அணியினரும் அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் அணியினரும் மோதினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இறக்காமம் றெக்ஸ்டா அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர் 05 விக்கட்டுக்களை இழந்து 05 ஓவர் முடிவில் இறக்காமம் றெக்ஸ்டா அணியினர் 27ஓட்டங்களைப் பெற்றனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் அணியினர் 01 விக்கட்டினை இழந்து 02 ஓவர்கள் இரண்டு பந்துகள் முடிவில் 28 ஓட்டங்களைப்பெற்று 06 விக்கட்டுகளால் வெற்றிபெற்று அட்டாளைச்சேனை நியூஸ்டார் அணியினர் றெக்ஸ்டா வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்

இறுதிப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நியூ ஸ்டார் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முபாரிஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் இடத்தினைப் பெற்ற இறக்காமம் றெக்ஸ்டா அணியினருக்கு 20000 ரூபா பணப்பரிசும் கிண்ணமும் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த வழங்கினார். றெக்ஸ்டா அமைப்பின் தலைவர் எம்.எல்.முஸப்பீர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர்,பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.முஸ்மி, எம்.எஸ்.ஜெமில் காரியப்பர்,சிரேஷ்ட விளையாட்டு ஆசிரியர் ஏ.எல்.ஹமீம்,ஆசிரிய ஆலோசகர் ஏ.அஸீஸ், இறக்காம்ம் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச்.றியாஸ் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

(ஹிங்குறாணை குறூப் நிருபர்)

 

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை