சிங்கப்பூரிடமிருந்து தகவல் கிடைத்தும் என்ன நடந்தது என்பது தெரியாது

முன்னாள் பிரதமர் ரணில் கைவிரிப்பு

எயார் பஸ் கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரிடம் நாம் கோரியிருந்த போதிலும் அத் தகவல்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் எமக்குத் தெரியாதென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இக்கொள்வனவில் இடம்பெற்றுள்ள மோசடிகள் நிரூபணமாகும் வகையில் உள்ளமையால் உறுதியான தீர்மானமொன்று எடுக்கப்படாவிடின் எதிர்காலத்தில் எயார் பஸ்களை எம்மால் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

எயார் பஸ் கொள்வனவு தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று பாராளுமன்றில் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

2017ஆம் ஆண்டுதான் எயார் பஸ் கொள்வனவு உடன்படிக்கை தொடர்பில் முதலாவது அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. எம்மிடம் இது தொடர்பில் தகவல்கள் இருக்கவில்லை.

என்றாலும் குற்றப்புலனாய்வு பிரிவில் தகவல்கள் இருந்துள்ளன. இத் தகவல்களை ‘ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்ஷநெனல் சிறிலங்கா’ ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

தரவுகளின் பிரகாரம் சிங்கப்பூர் மற்றும் சம்மந்தப்பட்ட நாடுகளில் இது தொடர்பிலான தகவல்களை கோரினோம்.

சிங்கப்பூரில் இந்நிறுவனத்தின் பெயர் இருந்த போதிலும் அதன் உரிமையாளர் யாரென குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் இந்த தகவல்கள் இலங்கைக்கு சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்பட்டன.

அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென எமக்குத் தெரியாது.

இனி நாம் செய்ய வேண்டியதாவது, பிரிட்டன் ஏற்றுமதி நிதியம் மற்றும் பாரிய ஊழல் - மோசடிகள் தொடர்பிலான பிரிட்டன் அலுவலகத்திடமிருந்த இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஊழல் - மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நிரூபணமாகக் கூடிய வகையில் தகவல்கள் உள்ளன. இதன் காரணமாக எதிர்காலத்தில் எம்மால் எயார் பஸ்களை கொள்வனவு செய்ய முடியாது போகலாம்.

ஆகவே, இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதா? என்பது இதுதொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை