ஆஸி ஓபனில் முதல் முறை பட்டம் வென்றார் கெனின்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்பினி முகுருசாவுடன் கடந்த சனிக்கிழமை மோதிய சோபியா கெனின் 4–6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர், முகுருசாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார்.

2ஆவது மற்றும் 3ஆவது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சோபியா 4–6, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வென்று கிண்ணத்தை முத்தமிட்டார்.

இது அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இப்போட்டி 2 மணி, 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பிறந்த சோபியா அமெரிக்காவில் குடியேறி, புளோரிடா மாகாணம் பெம்புரோக் பைன்ஸ் நகரில் வசித்து வருகிறார். அதேபோன்று, வெனிசுவேலா தலைநகர் கராகஸில் பிறந்த முகுருசா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்தாலும், ஸ்பெயின் வீராங்கனையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை