லிவர்பூல் அணிக்கு அடுத்தடுத்து வெற்றி

இரண்டாவது பாதியில் கோல் மழை பொழிந்த லிவர்பூல் அணி செளதம்டன் அணிக்கு எதிராக 4–0 என வெற்றியீட்டி ப்ரீமியர் லீக்கில் எட்டக் கடினமான 22 புள்ளிகள் இடைவெளியுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கடந்த பருவம் தொடக்கம் லிவர்பூல் அணி தனது சொந்த மைதானமான அன்பீல்டில் தொடர்ச்சியாகப் பெறும் 20 ஆவது வெற்றி இதுவாகும். இது 2011 மார்ச் தொடக்கம் 2012 மார்ச் வரையான காலத்தில் மன்செஸ்டர் சிட்டி நிகழ்த்திய சாதனையை சமன் செய்வதாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் லவர்பூல் இதுவரை ஆடிய 25 போட்டிகளில் 73 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணி 1990க்குப் பின் முதல் முறை ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கு ஏஞ்சிய 13 போட்டிகளில் இன்னும் 21 புள்ளிகளை பெற்றால் உறுதியாகிவிடும்.

மறுபுறம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உபாதை காரணமாக சாடியோ மானே இல்லாத நிலையில் லிவர்பூல் அணி முதல் பாதியில் கோல் பெறுவதில் தடுமாற்றம் கண்டது.

டன்னி இன்ங்ஸின் இரண்டு கோல் முயற்சிகளை லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் தடுத்ததோடு மறுமுனையில் லிவர்பூலின் இரண்டு கோல் வாய்ப்புகளை செளதம்டனின் அலெக்ஸ் மகார்தி அபாரமான தடுத்தார்.

எனினும், இரண்டாவது பாதியில் கோல்கள் இடைவிடாது விழுந்தன. 47 ஆவது நிமிடத்தில் ஒக்ஸ்லாடே சம்பர்லைன் லிவர்பூல் சார்பில் முதல் கோலை பெற போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போது ஜோர்டன் அன்டர்சன் கோல் எண்ணிக்கையை இரண்டாக்கினார்.

கடைசி நேரத்தில் மொஹமட் சலாஹ் இலகுவாக இரண்டு கோல்களை பெற்றார். 72 ஆவது நிமிடத்தில் எந்த நெருக்கடியும் இன்றி பந்தை வலைக்குள் செலுத்திய சலாஹ் பின்னர் ரொபார்டோ பெர்மினோ போட்டியில் மூன்றாவது கோல் உதவியை பெற்றுக்கொடுக்க சலாஹ் அதனை கோலாக மாற்றினார்.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை