இலங்கை வர்த்தக சேவை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிகள் நாளை

இலங்கை வர்த்தக சேவை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான நொக் அவுட் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிகள் நாளை (29) கொம்பனித் தெரு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

14 முன்னணி அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஏ மற்றும் பி அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. இதன்படி பி பிரிவின் இறுதிப் போட்டியில் அமானா வங்கி மற்றும் கொமர்சியல் கிரடிட் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி நாளை பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு நடைபெறவிருக்கும் ஏ பிரிவு இறுதிப் போட்டியில் எக்ஸ்போ லங்கா பிரைக்ட் எதிர் எச்.என்.பி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் பி பிரிவில் பத்து அணிகள் விளையாடியதோடு அதன் அரையிறுதியில் அமானா வங்கி, டயலொக் அணியை வீழ்த்தியதோடு மற்ற அரையிறுதிப் போட்டியில் கொமர்சியல் கிரடிட் அணி டி.எப்.சி.சி வங்கி அணியை 11–03 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இதில் நான்கு அணிகள் பங்கேற்ற ஏ பிரிவு அரையிறுதிப் போட்டியில் எக்ஸ்போ லங்கா பிரைக்ட் அணி ஸ்ரீலங்கா டெலிகொம் அணியை 11–01 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மற்ற அரையிறுதிப் போட்டியில் எச்.என்.பி அணி செலிங்கோ இன்சூரன்ஸ் அணியை 5 – 2 என்ற கோல் அடிப்படையில் தோற்கடித்தது.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை