இலங்கை அணி ஸ்திரமான நிலையில்

சிம்பாப்வேயுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பந்து வீசி வரும் இலங்கை அணி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்திரமான நிலையில் உள்ளது.

ஹராரே மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தேனீர் இடைவேளைக்காக நிறுத்தப்படும்போதும் தனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் சிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில் நேற்று ஆரம்பமான போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் இலங்கை அணி களமிறங்கியுள்ளதுடன், சிம்பாப்வே அணி போட்டியை வெற்றிக்கொள்ளும் நோக்கில் களமிறங்கியுள்ளது.

இதில் இலங்கை அணி ஒரு மாற்றத்துடனேயே இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியுள்ளது. இதன்படி கசுன் ராஜித்தவுக்கு பதிலாக விஷ்வ பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

சிம்பாப்வே அணி சார்பில், உபாதைக்குள்ளாகியுள்ள கெயல் ஜார்விஸ் மற்றும் ஏய்ன்ஸ்லி என்ட்லோவோயு ஆகியோருக்கு பதிலாக கார்ல் மும்பா மற்றும் டினோடென்டா முட்டம்போட்ஜி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாப்வே அணியின் முதல் இரு விக்கெட்டுகளும் 49 ஓட்டங்களுக்கு பறிபோனது. லஹிரு குமாரவின் பந்துவீச்சில் பிரின்ஸ் மஸ்வவுரோ 9 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு 12 ஓட்டங்களை பெற்றிருந்த கிரேக் எர்வின் தனன்சய சில்வாவின் பந்துக்கு வெளியேறினார். தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த கெவின் கசுசா 97 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்ற நிலையில் சுரங்க டக்மாலின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். மத்திய வரிசையில் வேகமாக ஆடிய பிரன்டன் டெய்லர் 62 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்று லக்மாலின் பந்துக்கு வெளியேறினார்.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை