வாரத்தினுள் இறுதி முடிவு

அரைச்சொகுசு பஸ் விவகாரம்

அரைச்சொகுசு (Semi Luxury) பஸ் சேவையை இரத்துச் செய்வது தொடர்பில் ஒருவார காலத்தினுள் இறுதி முடிவு எடுப்பதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அரைச்சொகுசு பஸ் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் அறிவித்துள்ள அமைச்சர், பஸ் பிரதிநிதிகளுக்கு தமது தரப்பு கருத்துக்களை அறிவிக்க ஒருவார கால அவகாசம் வழங்கியுள்ளார்.

அரைச்சொகுசு பஸ் சேவையை 'கடுகதி வரையறுக்கப்பட்ட தரிப்பு சேவை' என பெயர்மாற்றி செயற்படுத்த அனுமதிக்குமாறு பஸ் சேவை பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கையை அமைச்சர் நிராகரித்துள்ளதோடு தொடர்ந்தும்  மக்களை சுரண்ட இடமளிக்க முடியாது என்றும் அறிவித்துள்ளார்.

அரைச் சொகுசு பஸ்களினால் மக்களுக்கு போதிய வசதிகள் கிடைப்பதில்லை. அதனால் இந்த சேவையை இரத்துச் செய்யுமாறு மக்கள் நீண்டகாலமாக கோரிவருகின்றனர்.

அரைச் சொகுசு பஸ் சேவை என்ற பெயரை மாற்றி கடுகதி வரையறுக்கப்பட்ட தரிப்பு சேவை என மாற்றி தொடர்ந்து செயற்பட இடமளிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் பெயர் மாறினாலும் அறவிடும் கட்டண தொகை மாறாது என்பதால் அதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் உறுதியாக கூறியுள்ளார். அரைச்சொகுசு சேவையை செயற்படுத்துவதாக இருந்தால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ள வசதிகளான ஆசன தொகைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுதல், ஆசன வசதி, வரையறுக்கப்பட்ட தரப்பிடங்களில் மாத்திரம் நிறுத்துதல் போன்றவற்றை நிறைவு செய்ய வேண்டும். இது தொடர்பில் பஸ் சேவை பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை கூறாததோடு தமது சேவை வீழ்ச்சி அடைய இடமளிக்கக் கூடாது எனவும் கோரியுள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எந்த பஸ் ​சேவையையும் வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. இந்த சேவை தேவையில்லை என மக்கள் கோரியுள்ளதால் அது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியது.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை