லேக்ஹவுஸ் நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பேன்

தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்ன

லேக்ஹவுஸ் நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைக்கு உயர்த்தும் வேலைத் திட்டத்தில் தற்போது நிறுவன ஊழியர்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு சலுகைகளும் இல்லாமல் செய்யப்போவதில்லை என நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்ன தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் லேக் ஹவுஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே தனது எதிர்பார்ப்பு என குறிப்பிட்ட அவர், எதிர்பார்த்த இலாபத்தை அடைவதென்றால் ஊழியர்களுக்கு தற்போது வழங்கும் வரப்பிரசாதங்களை மேலும் விரிவுபடுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்த்தி வாசகர்களுக்கு சிறப்பான பத்திரிகைகளைப் பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய வருடத்தில் நிறுவனத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் விசேட நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றதுடன், நிகழ்வில் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிறுவனத் தலைவர்; லேக்ஹவுஸ் நிறுவனத்தில் 1,600 ஊழியர்கள் கடமை புரிகின்றார்கள். கடந்த 2019 நவம்பர் 16ஆம் திகதி நாட்டில் பாரிய புரட்சி ஏற்பட்டது. 69 இலட்சம் வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அதே போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அன்றிலிருந்து இன்றுவரை நாடு பெரும் மாற்றங்களை கண்டுவருகிறது. அந்த மாற்றம் எவரையும் பழிவாங்குவதற்காகவோ வேறு காரணங்களுக்காகவோ நிகழ்ந்தது அல்ல.

நாம் அனைவருமே நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் செயற்படவேண்டும். நாட்டில் தற்போது இளைஞர் யுவதிகள் கிராமங்களையும் நகரங்களையும் எழில்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு மதில்களில் சித்திரங்கள் வரையப்படுகின்றன. இதை எவரும் சொல்லி அவர்கள் செய்யவில்லை.

அது தமது கடமை என சொந்த விருப்பத்துடன் அவர்கள் செய்கின்றனர். நாம் கடந்த மாதம் 13ஆம் திகதி லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்தோம். அன்றைய தினம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவ பீடம் மற்றும் ஏனைய சகல பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

குறிப்பாக நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்பாக நாம் ஓரளவு தெளிவைப் பெற்றுக் கொண்டோம். அதனைக்கண்டு நாம் கவலை யடைந்தோம். மார்ட்டின் விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட எழுத்தாளர்கள் பணியாற்றிய மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம் 2018 மற்றும் 2019 வருடங்களில் நட்டத்தில் இயங்கி உள்ளமை தெரிய வந்தது.

அந்தவகையில் 2018ஆம் ஆண்டு நிறுவனம் 160 மில்லியன் ரூபாவையும் 2019 நவம்பர் வரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபாவும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்திற்கான காரணத்தையும் நாம் தற்போது இனங்கண்டு கொண்டுள்ளோம்.

எவ்வாறெனினும் இந்த வருட இறுதிக்குள் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டு இந்த நிறுவனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னேற்றுவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

நிறுவன ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் நூற்றுக்கு 53 வீதமான நிதி ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு செலவிடப்படுகின்றது. 1,600 பேர் இந்த நிறுவனத்தில் தொழில் புரிகின்றனர். இதற்கிணங்க 600 ஊழியர்கள் மேலதிகமாக உள்ளனர். அவ்வாறிருந்தும் தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்த ஒரு சலுகையையும் நீக்குவது எமது எதிர்பார்ப்பல்ல.

நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 80 வீதம் வர்த்தக விளம்பரங்கள் மூலமே பெற்றுக் கொள்ளப்படுகிறது. அந்த பிரிவின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.

அதற்கிணங்க இந்த நிறுவனத்தில் விளம்பர பிரிவு அல்லாத ஊழியர்கள் 5,000 ரூபாவுக்கு குறைவான சிறு விளம்பரங்களை கொண்டு வந்தால் அதில் 10 வீதத்தை அவர்களுக்கு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொது உடன்படிக்கைக்கிணங்க 2020 ஜனவரி மாதத்திலிருந்து நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 1,750 ரூபாய் அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை