ஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி

ஜெரூசலம், பழைய நகரின் பிரான்ஸ் நிர்வாகத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேலிய பொலிஸாருக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சிலுவைப் போர் காலத்தின் புனித ஆன்ஸ் தேவாலயத்திற்குள் நுழையும்போது தம்மை இஸ்ரேலிய பொலிஸார் தடுத்ததாக மக்ரோன் குற்றம்சாட்டியுள்ளார்.

“என் முன்னால் நீங்கள் நடந்துகொள்வது எனக்குப் பிடிக்கவில்லை. தயவு செய்து வெளியே செல்லுங்கள்” என்று இஸ்ரேலிய பொலிஸாரை அவர் எச்சரித்தார். தேவாலய வளாகத்தில் இருந்து பொலிஸாரை வெளியேறும்படியே அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

“சட்டத்தை மதியுங்கள். அது நூற்றாண்டுகளாக (அமுலில்) உள்ளது. என்னை பொறுத்தவரை அதில் மாற்றமில்லை என்பதை உங்களுக்கு சொல்கிறேன்” என்றும் மக்ரோன் இஸ்ரேல் பொலிஸாரிடம் கூறினார்.

ஐந்தாவது உலக யூதப் படுகொலை மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மக்ரோன் ஜெரூசலம் சென்றுள்ளார்.

1138 ஆம் ஆண்டின் ஜெரூசலத்தில் இருக்கும் அதிகம் பாதுகாக்கப்பட்ட சிலுவைப் போர் காலத்து தேவாலயமாக புனித ஆன்ஸ் தேவாலயம் உள்ளது. இது கன்னி மேரி மற்றும் அவரது பெற்றோர் வசித்த இடமாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

முஸ்லிம்களால் அல் ஹரம் அல் சரீப் என்று அறியப்படும் கிழக்கு ஜெரூசலத்தின் வடக்கு மலை உச்சியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.

கிரிமியா போரில் உதவியதற்கு நன்றிக்கடனாக இந்த தேவாலயத்தை 1856 இல் உஸ்மானிய துர்குகள் பிரான்ஸுக்கு அன்பளிப்புச் செய்தது தொடக்கம் இங்கு பிரான்ஸ் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு இந்த தேவாலயத்திற்கு அப்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி ஜக்ஸ் சிராக் சென்றபோதும் இஸ்ரேலிய பொலிஸாருடன் முறுகல் ஏற்பட்டது. இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்த பலஸ்தீனர்களை தள்ளியதற்கு சிராக் எதிர்ப்பை வெளியிட்டார்.

அப்போது அவர், “உங்களுக்கு என்ன வேண்டும்? நான் விமானத்தில் ஏறி பிரான்ஸ் திரும்ப வேண்டுமா? அது தானே உங்களுக்கு வேண்டும்? அவர்களை விடுங்கள். அவர்களை விடுங்கள்” என்று சிராக் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார்.

இந்த தேவாலயம் உள்ள கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் இறைமையை பிரான்ஸ் அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை