யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி வெட்டிக் கொலை

இராணுவ வீரர் கைது

காதல் பிரச்சினை காரணமாக யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இக் கொலையை மேற்கொண்டதாக இராணுவ சார்ஜன்ட் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றதுடன் இதன் போது பேருவளையை சேர்ந்த 29 வயதான காஞ்சனா என்ற யுவதியே கொல்லப்பட்டவராவர்.

இதேநேரம் கொலை சந்தேகநபராக பரந்தன் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ பொலிஸ் சார்ஜன்டனான பேருவளை பகுதியை சேர்ந்த மதுக தொன் எரங்க தீலிப்குமார என்பவரே பொலிஸாரால் கைது செய்யபட்டவராவர்.

இந் நிலையில் இக் கொலை சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இவர்கள் இருவரும் நண்பகல் பண்ணை கடற்கரையில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென இப் பெண்ணை இவரோடு கதைத்துக்கொண்டிருந்தவர் வெட்டி கொலை செய்து கடலுக்குள் தள்ளியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது அந் நபரை மடக்கி பிடித்த அங்கிருந்த பொதுமக்கள் அருகிலிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற யாழ்.பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இக் கொலை சம்பவத்திற்கு இவர்கள் இருவருக்கிடையிலான காதல் பிரச்சினையே காரணம் என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

குறித்த இராணுவ சார்ஜன்ட் பரந்தன் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ பொலிஸ் உத்தியோகத்தராவர்.

இவரும் இராணுவ மருத்துவ பிரிவிலேயே பணியாற்றி வருகிறார். இந் நிலையில் இவர்களிருவரும் ஒரே ஊர்கார்களாவர்.

இவர்களுகிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னரே அவ் யுவதிக்கு மருத்துவ கல்லூரி கிடைத்து யாழ்.பல்கலைகழகத்துக்கு வந்துள்ளார்.

இங்கு வந்த பின்னர் இவ் யுவதிக்கு வேறு நபருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாம் பதிவு திருமணம் செய்தவரை விவாகரத்து செய்யப்போவதாகவும், புதியவரையே திருமணம் செய்யப் போவதாகவும் ஊரிலுள்ளவர்களுக்கு கூறியுள்ளார்.

இதனையடுத்தே குறித்த இராணுவ சார்ஜன்டான இவர் இவ் யுவதியை பண்ணை கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளார்.

இதேவேளை பண்ணைக் கடற்கரை காவலாளியின் வாக்குமூலத்தில், குறித்த இருவரும் ஒன்றாக வந்து கடலை வாங்கி சாப்பிட்டனர்.

அதன்பின்னர் அவர்களிருவரும் குடை பிடித்தவாறு கடலுக்குள் காலை விட்டவாறு கரைக்கட்டிலிருந்து பேசிக்கொண்டிருந்தனர். இதன்போதே திடீரென இவளை குறித்த நபர் வெட்டிக்கொலை செய்துவிட்டு கடலுக்குள் தள்ளிவிட்டார் என தமது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அப் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை இக் கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அப் பொலிஸ் அதிகாரி கூறினார்.

யாழ்ப்பாணம் குறூப், கொக்குவில் குறூப் நிருபர்கள்

Thu, 01/23/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக