டிவிலியர்ஸை மீண்டும் அழைத்துவர தென்னாபிரிக்க சபை தீவிர முயற்சி

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்தில் ஏபி டிவில்லியர்ஸை விளையாட வைக்க தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை முயற்சி செய்து வருகிறது.

தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீ ஏபி டி வில்லியர்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடருக்கு முன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

மேலும் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோர் ஓய்வு பெற்றதால் அந்த அணி திணறியது. தற்போது அணியை சீரமைக்கும் வேலையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தீவிரம் காட்டி வருகிறது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை பணிப்பாளராக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களின் முதல் இலக்கே அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கிண்ண தொடருக்கு சிறந்த அணியை தயார் செய்வதாகும்.

முதற்கட்டமாக ஏபி டி வில்லியர்ஸை மீண்டும் டி20 சர்வதேச அணிக்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரிடம் பேசுவேன் என்று மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘நீங்கள் உலகக் கிண்ண தொடருக்கு செல்லும்போது, தலைசிறந்த வீரர்களுடன் விளையாட விரும்புவீர்கள். ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த வீரர்களில் ஒருவர் என நான் உணர்ந்தால், அவருடம் பேசி மீண்டும் அணிக்கு திரும்ப ஏன் அழைக்கக் கூடாது?’’ என்றார்.

இங்கிலாந்து உலகக் கிண்ண தொடரில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் தயாராக இருந்த நிலையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை