ஈரான் போராட்டக் குழு மீது அமெரிக்கா வான் தாக்குதல்

அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு துணைப் படைகளுக்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காதைப் ஹஸ்புல்லா குழுவின் குறைந்தது 25 போராளிகள் கொல்லப்பட்டு 50 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக ஈராக் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் குழு அமெரிக்காவினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிறது.

கிர்குக்கில் இருக்கும் இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயமடைந்தார்.

அமெரிக்க உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

காதைப் ஹஸ்புல்லா குழுவுடன் தொடபுபட்ட ஐந்து இலக்குகள் மீது எப் –15 ஜெட் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிட்டார். இதில் மேற்கு ஈரக்கில் மூன்று இலக்குகள் மீதும் கிழக்கு சிரியாவில் இரண்டு இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பெண்டகன் குறிப்பிட்டது.

ஆயுதக் களஞ்சியம் அல்லது கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களே இலக்குவைக்கப்பட்டதாக எஸ்பர் மேலும் கூறினார்.

இந்தப் போரட்டக் குழுவின் மேற்கு அல்கைம் மாவட்டத்தில் இருக்கும் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு நான்கு கட்டளைத் தளபதிகள் உயிரிழந்தவர்களில் இருப்பதாக ஈராக் வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

ஈரான் ஆதரவு கொண்ட ஷியா முஸ்லிம் போராட்டக் குழுவான காதைப் ஹஸ்புல்லா 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஈரானின் குத்ஸ் படையுடன் இந்தப் போராட்டக் குழுவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை