ஆஸி. காட்டுத் தீ அதிகரிப்பு: நாடெங்கும் வெப்பநிலை உச்சம்

அவுஸ்திரேலியாவில் கடும் வெப்பத்திற்கு மத்தியில் காட்டுத் தீச் சம்பவங்கள் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பரவி வருவதோடு அங்கு எல்லா மாநிலங்களிலும் போல் வெப்பநிலை 40 செல்சியஸ் வரை உச்சம் பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீ ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

அங்குள்ள பிரபல சுற்றுலா பகுதியான கிழக்கு கிப்லாண்டில் இருந்து 30,000 குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். எனினும் பிரதான வீதிகளில் தீ பரவி இருப்பதால் வெளியேற முடியாத நிர்க்கதி நிலைக்கு அந்த மக்கள் முகம்கொடுத்துள்ளனர்.

மேலும், இப்பகுதிகளில் நிலவும் அனல் காற்று காரணமாக புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடரும் காட்டுத் தீ காரணமாக வனவிலங்குகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், பல இடங்களில் நீர் ஆதாரங்கள் அழிந்துள்ளதாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் முதல் நீடித்து வரும் இந்த காட்டுத் தீ அச்சுறுத்தலினால் இதுவரை நாடெங்கும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினமாகும்போது விக்டோரியா மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது. கடும் வெப்பநிலை, வலுவான காற்று மற்றும் இடிமின்னல் அங்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டெஸ்மேனியா பகுதிகளுக்கும் நேற்று அவசர தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸில் தீயை கட்டுப்படுத்துவதற்கு அதிக பணத்தை செலவிடுதற்காக புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்துச் செய்யும்படி கால் மில்லியனுக்கு அதிகமான மக்கள் கைச்சாத்திட்ட மனுவென்றில் கோரப்பட்டுள்ளது.

எனினும் திட்டமிட்டபடி அந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

காட்டுத் தீயால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் சுமார் 900 வீடுகள் பாதிக்கப்பட்டன, 3.48 மில்லியன் ஹெக்டர் நிலம் கருகியது. சிட்னி நகரும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை