பழைய முறையிலேயே மாகாணசபைத் தேர்தல்

சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இணக்கம்

தற்போதைய தேர்தல் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேர்தல் சட்டத்திருத்தமொன்று கொண்டுவருவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நீதியமைச்சர்

நிமல் சிறிபால டி. சில்வாக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுகளில் இணக்கம் காணப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நீதியமைச்சில் இச் சந்திப்பு இடம்பெற்றது. நீதியமைச்சருடன் சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதியமைச்சு உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். தேர்தல்கள் திணைக்களத்தின் சார்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், உதவித் தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல் திணைக்கள சட்டப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தேர்தல் சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. முக்கியமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான திருத்தப் பிரேரணை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் அடுத்த வாரத்தில் மீண்டும் கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்க முடிவுசெய்யப்பட்டதாகவும் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டார். மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையிலேயே நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவரும் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டதாகவும் கூறினார்.

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை