அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி: நீர்கொழும்பு சென்மேரிஸ் கால்பந்தாட்ட அணி சம்பியன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடரில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் நீர்கொழும்பு சென்மேரிஸ் கால்பந்தாட்ட அணி சம்பியனாகியுள்ளது.

இதேவேளை, தொடரின் இரண்டாம் இடத்தினை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணியினர் பெற்றுக்கொண்டுள்ளனர். தொடரின் மூன்றாம் இடத்தினை குருநாகல் பம்மன்ன அல்- கமர் பாடசாலை அணியினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலமாக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணியானது 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளது.

கல்வி அமைச்சின் வழிகாட்டலில் அகில இலங்கை பாடசாலைகள் கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய இந்த போட்டி தொடரின் பரபரப்பான இறுதி ஆட்டம் புதன்கிழமை (18) மாலை வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் பாதியில் இரு அணிகளுக்கும் பலத்த பலப்பரீட்சை இடம்பெற்றன.

எனினும் கோல்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இரண்டாவது பாதியில் நீர்கொழும்பு சென் -மேரிஸ் அணி வீரர் வெலென்டினா 03 வது நிமிடத்தில் தனது அணிக்கான முதலாவது கோலினை புகுத்தினார். தொடர்ந்து அதே அணியின் வீரர் ரோஸைட் 16 வது நிமிடத்தில் இரண்டாவது கோலினை செலுத்தியதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் நீர்கொழும்பு சென் மேரிஸ் அணி 02 : 00 கோல்களினால் வெற்றி கொண்டு சம்பியனாகியதோடு புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

போட்டிக்கு நடுவர்களாக இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன நடுவர்களான ஆர்.சந்திரதாஸ, திலங்க கேசன், என்.சிவநேசன் ஆகியோர் கடமையாற்றினர்.

இரண்டாம் இடம் பெற்ற புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணியானது கோட்ட, வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளில் சம்பியனாக தகுதி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சாஹிராவின் வெற்றிக்காக உழைத்த அதிபர், நிர்வாகத்தினர், விளையாட்டு பொறுப்பாசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் குழுவினர்களுக்கு புத்தளம் வாழ் பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

 புத்தளம் தினகரன் நிருபர்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை