ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப அநுரவுக்கு வாக்களிக்க வேண்டும்

ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வேண்டுமெ​ன பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பீச் ஹொட்டலில் நேற்று (03) தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்வருகின்ற ஜனாதிபதித்த தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாகும். இத் தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த காலத் தேர்தல்களில் பல ஊழல்கள் இடம்பெற்றன. இப்போது கள்ள வாக்குகள் அழிக்க முடியாது.

கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி மோசடி செய்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். மக்கள் இன்னமும் ஏமாற மாட்டார்கள். மிகவும் தெளிவுடன் இருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றவில்லை என்றார்.

தற்போது பயம் காட்டி வாக்குகளை பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என இன வாதத்தை ஏற்படுத்தி மக்களிடத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வெவ்வேறான கருத்துக்களைக் கூறி வாக்குகளைப் பெறுவதற்கு எத்தனிக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்காவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவாரா. யுத்தம் நடக்கும் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்துடன் அமெரிக்காவிற்குச் சென்று அங்கு குடியுரிமை பெற்றார்.

நாட்டைப்பற்றி அவரிடம் கரிசனை இருந்திருந்தால் யுத்தம் நடக்கும் காலத்தில் அவர் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்தது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்காக அல்ல மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்பதற்காகவே இலங்கைக்கு வந்தவராவார்.

அது நாட்டை பாதுகாப்பதற்கல்ல. கடந்த 71 ஆண்டு கால இலங்கையின் அரசியலி வரலாற்றில் இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டை சீரழித்துள்ளன. கடந்த காலங்களில் இவ் இரு கட்சிகளுக்கும் மக்கள் மாறி மாறி ஆட்சிசெய்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்கி வந்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் நாட்டை சீரழிக்கும் சக்திகளின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்து விடாமல் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். நம்பகமான தேசிய சக்தியை பலப்படுத்த வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்புவது முன்னேற்றுவது தொடர்பான தெளிவான வேலைத்திட்டத்தினை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். தற்போது மக்கள் மத்தியில் புதிய இலங்கை குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஊழல் அற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் எல்லோரும் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.

ஊழல் வாதிகளை நிராகரித்து தூர நோக்கு சிந்தனை கொண்ட புதிய அரசியல் சக்தியுடன் ஒன்றுபட வேண்டும். தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவை எதிர்வரும் 16ம் திகதி நீங்கள் தெரிவு செய்ய வேண்டுமென்றார்.

ஒலுவில் விசேட நிருபர்

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை